கோவில்பட்டியில் அரிசி கடத்தலை தட்டிக் கேட்ட வழக்கறிஞர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.




தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ராஜூ நகர் மூன்றாவது தெருவை சேர்ந்த வெள்ளத்துரை என்பவரது மகன் மாரிசெல்வம். இவர் வழக்கறிஞர். கோவில்பட்டி பகுதியில் ரேஷன் அரிசி கடத்தல் கும்பலைச் சேர்ந்த பாம்பு கார்த்திக் என்பவர் சில தினங்களுக்கு முன்பு ராஜீவ் நகரை சேர்ந்த சிறுவன் ஒருவரை வீடுகளில் இருந்து ரேஷன் அரிசி வாங்கித் தருவதற்கு கட்டாயப்படுத்தியதாக தெரிகிறது இதற்கு சிறுவன் மறுக்கவே அவரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்த தகவல் அறிந்த அப்பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் மாரி செல்வம், பாம்பு கார்த்தியை தொடர்பு கொண்டு எதற்காக சிறுவன் லட்சுமணனை அடித்தாய் என்ன கேள்வி கேட்டுள்ளார்.


இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் பாம்பு கார்த்திக் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ரேஷன் அரிசி கடத்தி கொண்டு சென்ற வாகனத்தை விருதுநகர் அருகே போலீசார் பிடித்ததாக கூறப்படுகிறது.




இதனால் பாம்பு கார்த்திக் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வழக்கறிஞர் மாரிச்செல்வம் மீது கடும் கோபத்தில் இருந்துள்ளனர்.இந்நிலையில் நேற்று நள்ளிரவு 2 மணி அளவில் பாம்பு கார்த்திக் மாரி செல்வத்தை போனில் தொடர்பு கொண்டு மிரட்டி உள்ளார். அதனைத் தொடர்ந்து அதிகாலையில் பாம்பு கார்த்திக் தலைமையில் 20க்கும் மேற்பட்டோர் கார் மற்றும் பைக்குகளில் மாரிச்செல்வம் வீட்டின் கதவை தட்டியுள்ளனர். கதவைத் திறந்து வழக்கறிஞர்கள் மாறி செல்வம் வெளியே வந்த போது அந்த கும்பல் பெட்ரோல் குண்டுகளை சரமாரியாக வீசி விட்டு தப்பி ஓடி உள்ளது.


இதில் அவரது வீட்டின் முன் பகுதியில் கிரில் கம்பிகள் வழியாக வீட்டுக்குள் விழுந்தன. அப்பகுதியில் இருந்த பொருள்கள் தீயில் கருகி சேதம் அடைந்தன. மேலும் வழக்கறிஞர் மாரிச்செல்வம் வீட்டின் அருகே பக்கத்து வீட்டுக்காரர் நிறுத்தி வைத்திருந்த வாகனத்தையும் அந்த கும்பல் அடித்து சென்றுள்ளது. அதுமட்டுமின்றி ஊத்துப்பட்டி சாலையில் ஒரு தோட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மாரி செல்வம் வாகனத்தையும் அந்தக் கும்பல் பெட்ரோல் குண்டு வீசி தீவைத்து தப்பிச் சென்றுள்ளது.


இதுகுறித்து தகவல் அறிந்த கோவில்பட்டி மேற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தடயங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.




இதற்கிடையில் வழக்கறிஞர் மாரிச்செல்வத்தின் ஆதரவாளர்கள் பாம்பு கார்த்திக்கின் உறவினர் வீரவாஞ்சி நகரைச் சேர்ந்த கண்ணகி என்பவரது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதாகவும், மேலும் வீரவாஞ்சி நகரை சேர்ந்த சண்முகராஜ். என்பவர் வீட்டையும் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அடுத்தடுத்து நடைபெற்ற சம்பவங்களால் கோவில்பட்டி பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.