திருவொற்றியூரைச் சேர்ந்தவர் பத்மநாபன் (41). இவர் இந்தியன் ஆயில் கம்பெனியில் தற்காலிக ஊழியராக டேங்கர் லாரி ஓட்டி வந்தார். இவருக்கும் ஜெயலட்சுமி (40) என்பவருக்கும் கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.  ஜெயலட்சுமி ஏற்கனவே பால்வண்ணன் என்பவரை முதல் கணவராக திருமணம் செய்துள்ளார். பால்வண்ணன் பிரிந்து சென்ற பிறகு அவருடைய சகோதரனான துரைராஜ் என்பவரை திருமணம் செய்துள்ளார். துரைராஜ் ஒரு கட்டத்தில் பிரிந்து சென்றுள்ளார். இதனை அடுத்து தான் மூன்றாவதாக பத்மநாபனை திருமணம் செய்துள்ளார். ஜெயலட்சுமிக்கு தனது இரண்டாவது கணவரான துரைராஜ் மூலம் பவித்ரா (13) என்ற பெண் குழந்தை இருந்துள்ளார்.



திருமணமான பிறகு பவித்ரா மற்றும் ஜெயலட்சுமி  அனைவரும் ஒரே வீட்டில்தான் வசித்து வந்துள்ளனர். பத்மநாபன் மனைவியின் மீது சந்தேகம் கொண்டதால் அவர்களுக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. அடிக்கடி பத்மநாபன் ஜெயலட்சுமியிடம், உன் உடம்பில் வித்தியாசமான வாசனை வருகிறது, நீ எங்கு சென்று வருகிறாய் என சந்தேகப்பட்டு தொடர்ந்து கேட்டு வந்துள்ளார்.



இதனிடையே நேற்று நள்ளிரவு ஜெயலட்சுமிக்கு, அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருடன் தொடர்பு இருப்பதாக சந்தேகப்பட்டு திட்டியுள்ளார். அதற்கு ஜெயலட்சுமி மறுப்பு தெரிவித்துள்ளார். ”நீ கற்புக்கரசியாக இருந்தால் பவித்ராவை மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்து, நீ பத்தினி என்றால் அவள் உடம்பில் தீ பிடிக்காது” எனச் சொல்லியுள்ளார். பத்மநாபன்.சண்டை முற்றிய நிலையில் விரக்தியில் பவித்ரா மீது மண்ணெண்ணெய் ஊற்றி ஜெயலட்சுமி கொளுத்தி உள்ளார். பவித்ராவின் உடம்பில் தீ பற்றியதும் அதிர்ச்சியடைந்துள்ளனர். சிறுமியைக் காப்பாற்ற இருவரும் போர்வையைப் போட்டு அணைக்க முயற்சியும் செய்துள்ளனர். அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திருவொற்றியூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக வந்த காவல்துறையினர் சிறுமியை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.



 

பின்னர் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டு 78% தீக்காயம் ஏற்பட்டு கவலைக்கிடமான நிலையில் பவித்ரா சிகிச்சை பெற்று வந்தார். பவித்ராவிடம் மாஜிஸ்திரேட் வாக்குமூலம் பெற்றுள்ளார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுமி பவித்ரா இன்று உயிரிழந்துள்ளார். இதுதொடர்பாக திருவொற்றியூர் போலிஸார் வழக்குப்பதிவு செய்து பத்மநாபன் மற்றும் ஜெயலட்சுமியை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.