சென்னையில் உள்ள ஆவடி – இந்துக்கல்லூரி ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள தண்டவாளத்தில் நேற்று வழக்கம்போல ரயில்வே பணியாளர்கள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, தண்டவாளத்தில் இளம் பெண் ஒருவர் ரத்தக்காயத்துடன் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.


இதையடுத்து, ரயில்வே பணியாளர்கள் உடனடியாக ஆவடி ரயில்வே போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தண்டவாளத்தில் உயிரிழந்து கிடந்த பெண்ணின் சடலத்தை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.  




உயிரிழந்த பெண்ணின் கழுத்தில் இருந்த அடையாள அட்டையை வைத்து அந்த பெண் யார்? என்று போலீசார் விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய விசாரணையில் உயிரிழந்த பெண் ஒடிசாவைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. அவரது பெயர் மேகாஸ்ரீ. அவருக்கு வயது 30. அவரது தந்தை மோகன்பதான்.


மேகாஸ்ரீ டெல்லியில் எம்.டெக். படிப்பை முடித்துவிட்டு பி.எச்.டி. முடித்து முனைவர் பட்டம் பெற்றவர். சென்னை அடையாறில் உள்ள ஐ.ஐ.டி.யில் 3 மாத ஆராய்ச்சி படிப்பு பயிற்சிக்காக சென்னை வந்துள்ளார். மேகாஸ்ரீ அடையாறு கல்லூரி விடுதியில் தங்கி தனது ஆராய்ச்சி படிப்பைத் தொடர்ந்து வந்துள்ளார்.




இந்த சூழலில்தான் உயிரிழந்த மேகாஸ்ரீ மர்மமான முறையில் தண்டவாளத்தில் உயிரிழந்து கிடந்துள்ளார். சென்னை அடையாறு விடுதியில் தங்கியிருந்த மேகாஸ்ரீ ஆவடி ரயில் நிலையத்தில் சடலமாக கிடந்தது எப்படி? ஐ.ஐ.டி. மாணவியின் மரணத்திற்கு என்ன காரணம்? ஐ.ஐ.டி. மாணவி கொலை செய்யப்பட்டாரா? அல்லது தண்டவாளத்தை கடக்கும்போது ரயில் மோதி உயிரிழந்தாரா? என்று போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.


ஐ.ஐ.டி.யில் பயின்ற ஒடிசா மாணவி மர்மமான முறையில் தண்டவாளத்தில் உயிரிழந்து கிடந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.  


மேலும் படிக்க : Crime : உடலில் தீ வைத்துக்கொண்டு கல்லூரி முதல்வரை கட்டிப்பிடித்த மாணவர்.! காலேஜில் நடந்த பரபர சம்பவம்!


மேலும் படிக்க : Crime: திருடன் என சந்தேகம்... மொட்டை அடித்து, சாக்கடை சுத்தம் செய்ய வைத்து கும்பல் தாக்குதல்... அதிர்ச்சியூட்டும் வீடியோ!