சென்னை வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் 49 வது பிளாக் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (50). இவர் பந்தல் போடும் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி இந்திராணி (45). இவர்களுக்கு திருமணமாகி 25 வருடங்கள் ஆகிறது. இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். பிரபாகரன் அடிக்கடி குடித்து விட்டு தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை அடிப்பது வழக்கம் என கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு 9 மணி அளவில் வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் 49ஆவது பிளாக் பகுதியில் இந்திராணி நடத்தி வரும் சிறிய அளவிலான தையல் கடைக்குச் சென்ற பிரபாகரன் அங்கு அவருடன் சண்டையிட்டு உள்ளார்.

 




 

மேலும் அவரது நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை அடித்துள்ளார்.  அப்போது மது போதையில் இருந்த பிரபாகரன் அங்கிருந்த கத்தரிக்கோலை எடுத்து இந்திரானின் காதில் ஓங்கி குத்தியுள்ளார். இதில் ரத்தம் சொட்ட சொட்ட இந்திராணி சம்பவ இடத்திலேயே மயக்க மடைந்துள்ளார். இதனை அடுத்து அருகில் இருந்தவர்கள் இந்திராணியை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இந்திராணி சம்பவ இடத்திலேயே மயக்கம் அடைந்ததால் பயந்து போன பிரபாகரன் உடனடியாக வியாசர்பாடி  காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். வியாசர்பாடி போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்திராணியிடம் புகாரை பெற்றுக் கொண்டு பிரபாகரன் மீது வழக்குப் பதிவு செய்த வியாசர்பாடி போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 



 

வியாசபாடியில் முழு லாக்டவுனில் மதுபானம் விற்ற நபர் கைது



 

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உத்தரவு நடை முறையில் இருந்து வருவதால் அன்றைய தினம் மது பான கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனை பயன்படுத்தி சிலர்  மதுபாட்டில்களை முன் கூட்டியே  வாங்கி வைத்துக்கொண்டு அதனை கூடுதல் விலைக்கு விற்று வருகின்றனர். போலீசாரும் அவர்களை பிடித்து வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் வியாசர்பாடி பகுதியில் கள்ளச் சந்தையில் மதுபானம் விற்கப்படுவதாக எம்.கே.பி நகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் நேற்று வியாசர்பாடி ஜே.ஜே .ஆர் நகர் 5 ஆவது தெரு பகுதியில் ஒரு வீட்டில் திடீரென்று உள்ளே நுழைந்து சோதனை செய்த போது அங்கு சுமார் 30 மதுபாட்டில்கள் மற்றும் 8 கிலோ குட்கா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த பொருட்களை கைபற்றிய போலீசார் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்று வந்த தமிழ் ராஜ் வயது 44 என்ற நபரை கைது செய்தனர்.  அவர் மீது வழக்கு பதிவு செய்த எம்.கே.பி நகர் போலீசார் அவரை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.