சென்னை கொரட்டூர் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபரின் மகனை கடத்தி 1 கோடி ரூபாய் கேட்டு மிரட்டிய கடத்தல் கும்பலை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். 


கொரட்டூர் பாடி சத்யாவதி நகரைச் சேர்ந்தவர் சரவணன். இவர் அந்த பகுதியில் ஆட்டோ மொபைல்ஸ் கருவிகள் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். அவரது மகன் ஆதர்ஷ் சுப்ரமணியன். வயது 27. கடந்த மார்ச் 22-ம் தேதி வீட்டில் இருந்த ஆதர்ஷை மூன்று பேர் கொண்ட கடத்தல் கும்பல் வீடு தேடிவந்து கடத்திச் சென்றுள்ளனர். அதைப் பார்த்த அப்பகுதி மக்கள், காரை தடுத்து நிறுத்த முயற்சி செய்துள்ளனர். ஆனால், தப்பி சென்ற அந்த கார் ஆதர்ஷை கடத்தி சென்றுள்ளது.


கடத்திச் செல்லப்பட்ட சில மணி நேரங்களில் ஆதர்ஷின் தந்தைக்கு செல்போனில் அழைப்புவிடுத்த அந்த கும்பல், 1 கோடி ரூபாய் கேட்டு மிரட்டியுள்ளது. அதனை அடுத்து, காவல் துறையினர் கடத்தல் கும்பலை தேடும் பணியை தீவிரப்படுத்தினர்.



ஆதர்ஷை கடத்தப் பயன்படுத்தப்பட்ட காரின் எண்ணை பயன்படுத்தி விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அந்த கார் தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் இருந்து வாடகைக்கு எடுக்கப்பட்டது தெரிய வந்தது. அதுமட்டுமின்றி, காரில் ஜி.ப்.எஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளதும் தெரிய வந்தது.


அதனை அடுத்து, நேற்று காலை அந்த ஜி.பி.எஸ் கருவியை பின் தொடர்ந்து சென்ற காவல் துறையினர் ஆந்திராவில் காரை பிடித்தனர். கடத்திச் செல்லப்பட்ட ஆதர்ஷ் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். அவரை கடத்திச் சென்ற ஆவடியைச் சேர்ந்த செந்தில்குமார், முகப்பேரைச் சேர்ந்த சிலம்பரசன், அம்பத்தூரைச் சேர்ந்த ஜீவன் பிரபு ஆகியோரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இதில், செந்தில்குமார் ஆதர்ஷின் உறவினர் என்பது தெரிய வந்துள்ளது. தொழிலதிபருடன் ஏற்பட்ட பண பிரச்னை காரணமாக ஆதர்ஷை கடத்தி வைத்து பணம் பறிக்க முயற்சி செய்திருப்பதாக காவல் துறையினரிடம் கடத்தல் கும்ப தெரிவித்திருக்கிறது. அதனை தொடர்ந்து, மூவரையும் கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




மேலும் படிக்க: Nithyananda: நித்தி மீது பாலியல் புகார்! கைலாசாவில் பலபல கொடுமை! வெளிநாட்டு சிஷ்யையின் பரபர இ-மெயில்!!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண