கஞ்சா வாங்குவதை போல் நடித்த போலீஸ்

 

சென்னை புறநகர் பகுதியில் அதிக அளவு கஞ்சா பழக்கம் அதிகரித்து வருவதை ஒட்டி காவல்துறையினர் அதை கட்டுக்குள் கொண்டுவர பல்வேறு வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். வடக்கு கடற்கரை உதவி ஆணையர் தனிப்படை அமைத்து, இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், கஞ்சா பழக்கம் இருக்கும் பகுதியில் கஞ்சா வாங்குவதை போல் நடித்து, முக்கிய நபர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர். இதனையடுத்து பிடிபட்ட நபரிடம் விசாரணை மேற்கொண்டதில் கிடைத்த தகவலின் பேரில், தாம்பரம் அடுத்துள்ள மாடம்பாக்கத்தில் கஞ்சாவை தாங்களே , வீடுகளில் வளர்த்து வருவதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர்.

 

 சொந்தமாக நாமே வளர்க்கக்கூடாது

 

இதனை அடுத்து  மாடம்பாக்கம் சென்று சோதனை செய்தலில் சக்திவேல், சியாம் சுந்தர், ஸ்ரீகாந்த் மற்றும் நரேந்திரகுமார் ஆகிய நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் இவர்களது வீட்டில் கஞ்சா செடி வளர்ப்பதைக் கண்ட காவல் துறையினர், இது தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். கஞ்சாவை பிற மாநிலங்களில் இருந்து வாங்கும் பொழுது தரமான கஞ்சா கிடைப்பதில்லை என்றும் அதனால், தரமான கஞ்சாவை வீட்டில் வளர்த்து அதனை சென்னை புறநகர் பகுதியில் வசிக்கும் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறி வைத்து விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.

 



 

ஆன்லைனில் கற்ற வித்தை

 

கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில் முக்கிய நபராக இருக்கும் சக்திவேல் பொறியாளராகவும் இருந்து வருவதால், ஆன்லைனில் பல வகைகளில் இதுகுறித்து படித்து தெரிந்து கொண்டு, கஞ்சா வளர்ப்பில் ஈடுபட்டு வந்துள்ளார். முன்னதாக சக்திவேல் கிரிப்டோ கரன்சியாக மாற்றி டிரேடிங் தொழில் செய்து வந்துள்ளார். ஆனால், தொழிலில் நஷ்டம் அடைந்ததால், சக்திவேல் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கத் திட்டமிட்டுள்ளார். மேலும் கஞ்சாவை சிறப்பாக வளர்ப்பதற்காக, வெப்சைட்டில் வெளிநாடுகளில் பயன்படுத்தப்படும் கஞ்சா வளர்க்கக்கூடிய உபகரணங்கள் மற்றும் விதைகளை  வாங்கியுள்ளார். அதேபோல் கஞ்சாவின் வாசனை பரவாமல் இருப்பதற்காக ஏசி உள்ளிட்டவற்றை பயன்படுத்தி, ஆய்வகம் போன்று அமைத்து கஞ்சாவை பதப்படுத்தி வந்துள்ளார்.

 

போதை ஸ்டாம்ப்

 

இது மட்டுமில்லாமல் போதை ஷாம்புகளை விற்பனை செய்து வந்துள்ளார். மேலும் வீட்டில் வளரும் கஞ்சா உயர் கஞ்சாவாக இருப்பதால் ஒரு கிராம் கஞ்சாவை 1500 ரூபாய் வரை விற்பனை செய்து வந்ததும் காவல்துறையினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. நான்கு வருடங்களுக்கு மேலாக சக்திவேல் இந்த வேலையில் ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது மேலும் இது குறித்து விசாரணை காவல்துறையினர் தீவிரப் படுத்தி உள்ளனர்.