தந்தை, சகோதரியை சினிமா கலைஞர் ஒருவர் கழுத்தறுத்துக் கொலை செய்த சம்பவம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சினிமா கலைஞர்கள்:
காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு அடிசன் நகர் ராவேந்திரா தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ். இசைப் பயிற்சி ஆசிரியராக பணியாற்றி வந்த இவர் அந்த தெருவில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இவருடைய மனைவி சாந்தி சினிமாவில் துணை நடிகையாக நடித்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு ராஜேஷ் பிராங்கோ , பிரகாஷ் என்ற மகன்களும், பிரியா என்ற மகளும் உள்ளனர். இவர்களில் ராஜேஷூக்கு திருமணமாகி படப்பையில் வசித்து வருகிறார்.
பிரியாவும் திருமணம் செய்துக் கொண்டு அதே பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். சினிமா துறையில் டப்பிங் கலைஞராக பணியாற்றி வரும் பிரகாஷ் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இதனிடையே நேற்று மாலை பிரியாவின் வீட்டுக்குச் சென்ற பிரகாஷ் அங்கு அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் இருவருக்குமிடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரத்தில் பிரகாஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பிரியாவின் கழுத்தை அறுத்தார். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
தந்தையும் கொலை:
இந்த சம்பவத்தால் பிரியாவின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்து கூச்சல் போட அக்கம் பக்கத்தினர் அங்கு வந்தனர். ஆனால் அதற்குள் பிரகாஷ் தப்பிச் சென்றுவிட்டார். இதனையடுத்து பிரியா கொலை தொடர்பாக அவருடைய அம்மா சாந்தி மற்றும் அண்ணண் ராஜேஷூக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இருவரும் அங்கு வந்து பிரியாவின் உடலை பார்த்து கதறி அழுதனர். ஆனால் செல்வராஜ் மட்டும் அங்கு வரவே இல்லை.
இதனால் வீட்டுக்கு சென்று பார்த்தப்போது படுக்கையறையில் அவரும் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தார். இதனைத் தொடர்ந்து மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் அதேபகுதியில் சுற்றித்திரிந்த பிரகாஷை போலீசார் கைது செய்தனர்.
குடிப்பழக்கம்:
அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், குடிப்பழக்கத்துக்கு ஆளான பிரகாஷ் அடிக்கடி பெற்றோர் மற்றும் சகோதரியிடம் சண்டைப் போட்டு வந்துள்ளது தெரிய வந்தது. மேலும் நேற்று வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த செல்வராஜை கொன்று விட்டு பின்னர் பிரியாவையும் கொலை செய்துள்ளார். இந்த கொலைக்கு காரணம் சொத்து பிரச்சினையா அல்லது வேறு எதுவுமா என்பது பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது.