சென்னையில் கடத்தப்பட்ட ஒன்றரை மாத குழந்தை திருவேற்காட்டில் மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக குழந்தை கடத்தலில் ஈடுபட்ட கணவன் மனைவி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
13 ஆண்டுகள் கழித்து பிறந்த குழந்தை
சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ். இவரின் மனைவி நிஷாந்தி (31). இவருக்கு கடந்த 45 நாள்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. ஆரோக்கியதாஸ் மற்றும் நிஷாந்தி தம்பதியினருக்கு, 13 ஆண்டுகள் குழந்தை இல்லாததால், தங்களுக்குப் பிறந்த ஆண் குழந்தையை குழந்தையை குடும்பத்தினர் கண்ணும் கருத்துமாக கவனித்து வந்தனர். இந்தநிலையில், ஆரோக்கியதாஸ் வீட்டிற்கு பெண் ஒருவர் வந்துள்ளார்.
அரசு ஊழியர் என நாடகம்
குழந்தையின் தாய் நிஷாந்தியிடம், தான் ஒரு அரசு ஊழியர் எனக்கூறிய அந்த பெண், அரசின் நிதியுதவி பெற்றுத் தருவதாகக் கூறி குழந்தையுடன் தாய் நிஷாந்தியை தியாகராயர் நகர் ஓட்டலுக்கு அழைத்து வந்துள்ளார். ஓட்டலில் நிஷாந்தி கைகழுவச் சென்றபோது தீபா என்பவர் குழந்தையை கடத்திச் சென்றார்.
கதறி அழுத தாய்
குழந்தையுடன் பெண் மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்த நிஷாந்தி, கதறி அழுதபடி தன்னுடைய குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தார். மேலும் கண்ணகி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், அங்குள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். உடனடியாக தனி படை அமைத்து போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டனர்.
வெளியான சிசிடிவி காட்சிகள்
குழந்தையை கடத்திய பெண், தனது துப்பட்டாவால் முகத்தை மறைத்தபடி செல்லும் காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த காட்சியின் அடிப்படையிலும், ஆட்டோ பதிவெண்ணை வைத்தும் குழந்தையை கடத்திய பெண்ணை போலீசார் வலை வீசி தேடி வந்த நிலையில் சென்னை திருவேற்காட்டில் போலீசார் குழந்தையை மீட்டு கடத்திய தீபாவின் மூன்றாவது கணவர் அரியை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் சென்னை திருவேற்காடு தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். சந்தேகம் இருந்ததால் உடனடியாக மருத்துவமனை காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததின் அடிப்படையில், குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டு தாயிடம் ஒப்படைக்கப்பட்டது.
தனி படை போலீசார் நடவடிக்கை
இதனைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்தது தீபாவை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்த நிலையில் நேற்று கைது செய்யப்பட்டார். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள உறவினர் வீட்டில் இருந்தபோது தீபா தணிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
பரபரப்பு வாக்குமூலம்
போலீசார் தீபாவிடம் நடத்திய விசாரணையில், திருவேற்காடு பகுதியில் தோழி ஒருவரின் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தனக்கு திருமணம் ஆகி நீண்ட நாளாக குழந்தை இல்லை என அவரிடம் தெரிவித்துள்ளார். அதற்கு அந்தப் பெண்மணி தன்னை கண்ணகி நகர் பகுதிகளில் ஏழ்மையானவர்கள் இருப்பார்கள். அவர்களிடம் இருந்து குழந்தைகளை வாங்கலாம் என கூறியுள்ளார்.
தீபா அங்கு சென்ற போது ஆரோக்கியதாஸ் நிஷாந்தி தம்பதியினரை பார்த்துள்ளனர். அவர்களது குழந்தை அவருக்கு பிடித்துள்ளது, அவர்களுக்கும் பத்தாண்டுகள் கழித்து குழந்தை பிறந்துள்ளதால் கேட்டால் கொடுக்க மாட்டார்கள் என்பதால், திட்டமிட்டு கடத்தியதாக போலீசாரிடம் பரபரப்பு வாக்கு மூலம் அளித்துள்ளார். சென்னையில் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது.