Pongal Bus Ticket Booking : தமிழ்நாட்டில் கோலாலகமாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று பொங்கல். தமிழர் திருநாளாக கொண்டாடப்படும் இந்த பண்டிகைக்காக சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட வெளியூர்களில் வசித்து வரும் பொதுமக்கள் தங்களது குடும்பத்துடன் பொங்கலை கொண்டாட சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம்.
90 நாட்களுக்கு முன்பே முன்பதிவு:
இதற்காக, சிறப்பு பேருந்துகளும், ரயில்களும் இயக்கப்படுவது வழக்கம். குறிப்பாக, தமிழ்நாடு அரசு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகளை இயக்குவது வழக்கம். தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும்பொங்கல் என அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் வருவதால் சென்னை உள்ளிட்ட வெளியூர்களில் இருந்து பொதுமக்கள் குடும்பங்களுடன் புறப்பட்டுச் செல்வார்கள்.
இந்த நிலையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் இன்று முதல் அரசு பேருந்துகளில் பயணிக்க 90 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்து கொள்வதற்கான வசதியை அமல்படுத்தியுள்ளது.
தொடங்கியது பொங்கல் முன்பதிவு:
இதன்படி, பார்த்தால் பொங்கல் பண்டிகைக்குச் செல்ல பேருந்துகளை இன்றே முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த பேருந்துகள் பொங்கலுக்கு அரசு சார்பில் இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள் அல்ல. வழக்கமான நாட்களில் இயக்கப்படும் பேருந்துகள் ஆகும். பொங்கல் பண்டிகை நெருங்கும் நேரத்தில் பொங்கல் சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு வெளியாகும். அந்த பேருந்துகளுக்கான முன்பதிவு குறித்து அப்போது அறிவிப்பு வெளியிடப்படும். தமிழ்நாடு அரசின் இணையதளமான www.tnstc.in அல்லது TNSTC அதிகாரப்பூர்வ இணையதளத்தின் உள்ளே சென்று முன்பதிவு செய்து கொள்ளலாம்.
பொங்கல் சமயத்தில் பேருந்துகளை முன்பதிவு செய்வதில் ஏற்படும் சிரமத்தை தவிர்ப்பதற்காக பொதுமக்கள் முன்கூட்டியே பேருந்துகளை பதிவு செய்து கொள்ளலாம் என்று அரசு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. பொங்கல் பண்டிகை தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் மிக மிக முக்கியமான பண்டிகை என்பதால் அரசு நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள் என பெரும்பாலான நிறுவனங்கள் இயங்காது. சென்னையில் இருந்து மட்டும் லட்சக்கணக்கான மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். கோவை மற்றும் திருப்பூரில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம் ஆகும்.
சிறப்பு பேருந்துகள்:
இவர்களின் வசதிக்காக கோயம்பேடு, கிளாம்பேக்கம் பேருந்து நிலையம் மற்றும் மாதவரத்தில் இருந்து சென்னையில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். பொதுமக்கள் கிளாம்பாக்கம் செல்வதற்காக சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு இயக்கப்படுவதும் வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.