TVK DMK VIJAY: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தொண்டர்கள் தீவிரமாக செயல்பட வலியுறுத்தியுள்ளார்.


தமிழக வெற்றிக் கழகம்:


தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகரான விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி, முதல் மாநில மாநாட்டையும் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார். அந்த மாநாட்டில் விஜய் பேசிய கருத்துகள் மாநில அரசியலில் ஏற்படுத்திய சலசலப்பு இன்னும் ஓய்ந்தபாடில்லை.  அதேநேரம், 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, கட்சியை வலுப்படுத்தும் பணிகளில் விஜய் ஈடுபட்டுள்ளார். விரைவில் அவர் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தான், தமிழக வெற்றிக் கழகத்தினருக்கு எதிராக திமுகவினர் செயல்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.



வாக்காளர் பட்டியலில் நீக்கப்படும் தவெக தொண்டர்கள்?  


தமிழகம் முழுவதும் வாக்காள் பட்டியல் திருத்தப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கம் போன்ற திருத்தங்களை மேற்கொள்ளலாம். வரும் சனி மற்றும் ஞாயிற்ற்றுக்கிழமைகளிலும், அந்தந்த பகுதி வாக்குச்சாவடிகளில் வாக்காளர் திருத்தப் பட்டியல் முகாம் நடைபெற உள்ள்து. இந்நிலையில் தான், தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் வாக்காளர் பட்டியலில் குறிவைக்கப்பட்டு நீக்கப்படுவதாகவும், இதற்கு திமுகவினர் தான் காரணம் என்றும் விஜய் தங்களது நிர்வாகிகளிடம் வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


நிர்வாகிகளுக்கு விஜய் போட்ட உத்தரவு: 


இதுதொடர்பாக வெளியாகியுள்ள தகவல்களின்படி, 



  • தமிழ்நாடு வாக்காளர் பட்டியலில் தவெக நிர்வாகிகளின் பெயர்கள் நீக்கப்படுவதை தடுக்க, நிர்வாகிகள் விழிப்புடன் செயல்பட வேண்டும். 

  • புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்” என தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.


மாநிலம் முழுவதும் தவெக சர்வே:


எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள கட்சிக்குள் என்ன மாதிரியான மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக மாவட்ட வாரியாக மாநிலம் முழுவதும் ஆய்வு செய்யவும் விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆய்வு விரைவில் தென்மாவட்டங்களில் இருந்து தொடங்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு பகுதியிலும் பூத் கமிட்டியை வலுப்படுத்துவதில் தொடங்கி அடிமட்டம் வரை, அனைத்து விதத்திலும் கட்சியை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் விஜய் அதிக கவனம் செலுத்தி வருவதாகவும் தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


திமுக Vs தவெக: 


திமுக தான் தனது அரசியல் எதிரி என விஜய் மாநாட்டில் வெளிப்படையாக பேசி இருந்தார். இதனால், 2026 சட்டமன்ற தேர்தல் விஜய் Vs உதயநிதி என அமையும் என அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இதனை உணர்த்தும் விதமாகவே திமுகவின் இரண்டாம்கட்ட தலைவர்கள் விஜயை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஆகியோர், மறைமுகமாக விஜயை விமர்சித்துள்ளனர். இந்த சூழலில் தான், வாக்காளர் பட்டியலில் இருந்து தவெகவிற்கு ஆதரவானவர்களை திமுகவினர் நீக்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.