சென்னை ஆலந்தூர் அருகே அமைந்துள்ளது நந்தம்பாக்கம். இந்த பகுதியில் 17 வயது சிறுமி ஒருவர் தனது அத்தை வீட்டில் வளர்ந்து வந்துள்ளார். அந்த சிறுமிக்கு பெற்றோர்கள் இல்லை. இதனால், தனது அத்தை வீட்டில் வளர்ந்து வருகிறார்.
கோபத்தில் வீட்டை விட்டுச் சென்ற சிறுமி:
அத்தை வீட்டிலே வளர்ந்து வரும் அந்த சிறுமியை அவரது அத்தை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால், மனம் உடைந்த அந்த சிறுமி வீட்டை விட்டு யாரிடம் சொல்லாமல் வெளியேறியுள்ளார். கடந்த 8ம் தேதி வீட்டை விட்டு சிறுமி வெளியேறியுள்ளார். வீட்டை விட்டு வெளியே சென்ற வீ்டிற்கு திரும்பாத நிலையில், அவரது அத்தை நந்தம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து, நந்தம்பாக்கம் போலீசார் சிறுமியை தீவிரமாக தேடியுள்ளனர். அப்போது, சிறுமி பம்மலில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, போலீசார் பம்மலில் சோதனை மேற்கொண்டதில் பம்மலில் மீட்டுள்ளனர். போலீசார் சிறுமியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
பாலியல் வன்கொடுமை:
போலீசார் விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியது. வீட்டை விட்டு கோபித்துக் கொண்டு வெளியேறிய சிறுமி சாலையோரம் நின்று கொண்டிருந்த கால்டாக்சி ஓட்டுனர் ஒருவரிடம் உதவி கோரியுள்ளார். அவர் கடலூர் மாவட்டம் புளியங்குடியைச் சேர்ந்த பாக்கியராஜ் என்பவர் ஆவார். 38 வயதான பாக்கியராஜ் அந்த சிறுமிக்கு வேலை வாங்கித் தருவதாக கூறியுள்ளார்.
அவரின் வார்த்தையை அந்த சிறுமி நம்பியுள்ளார். பின்னர், தனது நண்பரும், மற்றொரு ஓட்டுனருமான பரமசிவன் என்பவருக்கு போன் செய்து அழைத்துள்ளார். சிறுமியை காரில் ஏற்றிக் கொண்டு சென்ற இருவரும் சிறுமிக்கு வேலை வாங்கித் தராமல், காரிலே அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர், தங்கள் காரில் இருந்து பம்மலில் இறக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
சிறுமி கூறியதை கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, போலீசார் பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும், 17 வயது சிறுமியை காரில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த ஓட்டுனர்கள் பாக்கியராஜ் மற்றும் பரமசிவன் இருவரையும் கைது செய்தனர். இவர்கள் இருவர் மீதும் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தலைநகர் சென்னையிலே வீட்டை விட்டு கோபித்துக் கொண்டு வெளியேறிய சிறுமியை, ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.