பாசமாக வளர்த்த நாயை வேறு வழியின்றி நாய் பராமரிப்பு மையத்தில் விட்டு சென்ற நிலையில், அங்குள்ள ஊழியரே அடித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சிசிடிவி காட்சியின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


மனிதர்கள் சிலரிடம் பழகுவதை விட  செல்லப்பிராணிகளிடம் நமது நேரத்தை செலவிடும் போது நமக்கு மன நிம்மதியும், மகிழ்ச்சியும் ஏற்படும். ஆனால் நாம் ஆசையாய் வளர்க்கும் பிராணிகளுக்கு ஏதாவது ஒன்று நேர்ந்தால் நிச்சயம் நம்மால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. அப்படியொரு சம்பவம் சென்னையில் நிகழ்ந்ததோடு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆம்  செங்கம் பகுதியைச்சேர்ந்த சர்மிளா என்பவர், கோல்டன் ரெட்ரைவர் எனும் வெளிநாட்டு நாய்க்கு சார்லி என பெயரிட்டு பாசத்தோடு வளர்த்துவந்துள்ளார்.



 இந்நிலையில் தன்னுடைய மேற்படிப்பிற்காக வெளிநாட்டிற்கு சென்ற சர்மிளா, தான் பாசமாக வளர்த்த நாயை வேளச்சேரியில் உள்ள Pet Paws என்ற தனியார் செல்லப்பிராணி பராமரிப்பு நிறுவனத்தில் நாயை ஒப்படைத்து சென்றுள்ளார். மேலும் நாயின் பராமரிப்பிற்காக மாதந்தோறும் 12 ஆயிரம் கட்டணமாக சர்மிளா செலுத்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படி மாதந்தோறும் பணத்தினை அனுப்பி வந்த ஷர்மிளா அதிர்ச்சியாகும் வகையில் கடந்த 3-ஆம் தேதி செய்தி ஒன்று வந்துள்ளது. அப்போது பராமரிப்பு மைய ஊழியர், ஷர்மிளாவிடம் உங்களது நாய் மாரடைப்பால் இறந்துவிட்டதாக கூறியிருக்கிறார்.


இச்செய்தியைக் கேட்டவுடனே ஜெர்மனியில் இருந்து புறப்பட்டு சென்னை வந்த ஷர்மிளா, நாயின் சடலத்தைப்பெற்றதோடு, இறுதி சடங்கையும் மரியாதையுடன் நடத்தியுள்ளார். இருந்தப்போதும் எப்படி தான் வளர்த்த நாய் மாரடைப்பால் உயிரிழந்திருக்கக்கூடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனையடுத்து  வேளச்சேரியில் உள்ள பராமரிப்பு மையத்திற்கு சென்று என்ன நடந்தது? என கேட்கவும் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை தான் பார்க்க வேண்டும் என்று சண்டையிட்டுள்ளார்.  பின்னர் பல போராட்டங்களுக்கு பிறகு அங்குள்ள சிசிடிவி காட்சிகளைப் பார்த்த ஷர்மிளா மிகவும் அதிர்ச்சியாகியுள்ளார். அதில் இயற்கை உபாதை கழித்ததற்காக வடமாநில பராமரிப்பாளர் நாயை கொடூரமாக தாக்கிய நிலையில், சிறிது நேரத்திலேயே வாந்தி எடுத்த நிலையில் மயக்கமடைந்து உயிரிழந்துள்ளது.



இதனையடுத்து சிசிடிவி ஆதாரத்துடன் வேளச்சேரி காவல்நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து, வேளச்சேரி பெட்ஸ் பராமரிப்பு நிறுவன உரிமையாளர் ராம், ஊழியர்கள் மார்டின் உள்பட மூன்று பேர் மீது, மிருகங்களைக் கொல்லுதல், மிருக வதை தடை சட்டம் உள்ளிட்ட நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  மேலும் நாயைக் கொடூரமாக கொன்ற நபர்களுக்கு கடுமையான தண்டனைக் கொடுக்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு கருத்துக்களை நெட்டிசன்கள் பகிர்ந்துவருகின்றனர்.