பெண்களுக்கு எதிரான வரதட்சணை கொடுமை தொடர்ந்து ஒரு சில இடங்களில் நடைபெற்று தான் வருகிறது. அப்படி வரதட்சணை கேட்டு மருமகளை சித்திரவதை செய்து தற்கொலைக்கு தூண்டிய மாமியர் மற்றும் கணவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. 


சென்னை அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிப்புரிந்து வந்தவர் மரியானோ ஆண்டோ புருனோ(36). இவருக்கும் மன நல மருத்துவராக பணிப்புரிந்து வந்த அமலி விக்டோரியாவிற்கும் 2005ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. அதைத் தொடர்ந்து 2007ஆம் ஆண்டு இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதன்பின்னர் வீட்டில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக அமலியிடம் தொடர்ந்து மேலும் வரதட்சணை கொண்டு வர மாமியர் மற்றும் கணவர் வற்புறுத்தி வந்ததாக தெரிகிறது. இவர்களின் தொல்லை தாங்க முடியாமல் 2014ஆம் ஆண்டு மருத்துவர் அமலி வீட்டின் கழிவறையில் தற்கொலை செய்துள்ளார். 




அவருடைய தற்கொலைக்கு பிறகு கணவர் மரியானோ, மாமியர் அல்போன்சாள் மற்றும் மாமனார் ஆகிய மூன்று பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், மருமகளை வரதட்சணை கேட்டு சித்திரவதை செய்தது தெரியவந்துள்ளது. இரண்டாவது குழந்தை பிறக்கவில்லை என்பதற்காக பூஜை நடத்தி அவரை மாட்டு கோமியத்தை குடிக்க வைக்கும் அளவிற்கும் சித்திரவதை நடந்துள்ளது தெரியவந்துள்ளது. அதன்பின்பு மகளிர் நீதிமன்றத்தில் இவர்களை ஆஜர் படுத்தியுள்ளனர். அந்த வழக்கில் மகளிர் நீதிமன்றம் கணவர் மரியோனா மற்றும் மாமியர் அல்போன்சாள் ஆகிய இருவருக்கும் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. அத்துடன் 30 ஆயிரம் ரூபாய் அபராதத்தையும் விதித்து தீர்ப்பளித்தது. மாமனார் நீதிமன்றம் வழக்கில் இருந்து விடுவித்து விடுதலை செய்தது. 


இந்தத் தீர்ப்பை எதிர்த்து மரியானோ மற்றும் அவருடைய தாய் அல்போன்சாள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது. அதில் இந்த வழக்கில் மருத்துவர் அமலி தற்கொலை செய்து கொள்ள மாமியர் மற்றும் கணவர் ஆகிய இருவரும் காரணமாக இருந்தது தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆகவே அவர்களுக்கு கீழமை நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சரியானது. இந்த வழக்கை தள்ளுப்படி செய்து அவர்கள் இருவருக்கும் 7 ஆண்டு சிறை தண்டனை உறுதி செய்யப்படுகிறது என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. வரதட்சணை கொடுமை காரணமாக மருத்துவர் ஒருவர் தற்கொலை செய்து 7 ஆண்டுகளுக்கு பிறகு மேல் முறையிட்டு வழக்கில் தீர்ப்பு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: நிர்வாண வீடியோவை பரவவிட்ட கடத்தல் கும்பல்.. உதவிக்கு வராத காவல்துறை.. பினாயிலை குடித்த எம்.பி.ஏ மாணவன்..!