துபாயிலிருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த, ரூ. 63 லட்சம் மதிப்புடைய 1.16 கிலோ தங்கம், சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டு, கடத்தல் பயணியை சுங்க அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சூட்கேசுக்குள் ரகசிய அறைக்குள், கருப்பு கார்பன் பேப்பரால் சுத்தப்பட்டு, மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 தங்க கட்டிகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.

 

துபாயிலிருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று இரவு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது சென்னையைச் சேர்ந்த ஒரு பயணி, துபாய்க்கு சுற்றுலா விசாவில் போயிட்டு, இந்த விமானத்தில் திரும்பி வந்தார். அவர் மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி விசாரித்தனர். அப்போது அந்தப் பயணி  முன்னுக்குப் பின் முரணாக பேசினார்.

 

இதை அடுத்து சுங்க அதிகாரிகள் அந்தப் பயணியை வெளியில் விடாமல், தீவிர சோதனை நடத்தினார். அவருடைய சூட்கேஸில் ரகசிய அறை இருந்ததை கண்டுபிடித்தனர். அதை உடைத்து பார்த்த போது அதனுள், கருப்பு கார்பன் பேப்பரில் சுத்தப்பட்டு, 10 தங்க கட்டிகள் இருந்தன. விமான நிலையத்தில் சூட்கேசை ஸ்கேன் செய்யும் போது, ஸ்கேனில் தங்கக் கட்டிகள் இருப்பது  தெரியாமல் மறைப்பதற்காக, தங்கக் கட்டிகளை  கருப்பு கார்பன் பேப்பர்களில் சுற்றி மறைத்து எடுத்து வந்துள்ளார் என்று தெரியவந்தது.

 

அந்த 10 தங்கக் கட்டிகளின் மொத்த எடை ஒரு கிலோ 165 கிராம். அதன் சர்வதேச மதிப்பு ரூ. 63 லட்சம். இதை அடுத்து சுங்க அதிகாரிகள் அந்தப் பயணியை கைது செய்தனர். அதோடு பத்து தங்க கட்டிகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் அந்த சென்னை பயணியிடம் தொடர்ந்து விசாரணை நடத்துகின்றனர்.