செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி (chengalpattu government medical college )

 

செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரியாக, செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு ஏராளமான மருத்துவ மாணவ, மாணவிகள் பயின்று வருகிறார்கள். அதேபோல் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையும் இயங்கி வருகிறது. மிக முக்கிய மருத்துவமனையாக உள்ள செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் மருத்துவம் பார்த்து வருகின்றனர். அதேபோன்று நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்களும் பணியாற்றி வருகின்றனர். இங்கு கண், நரம்பியல், காது மூக்கு தொண்டை, எலும்பியல், பச்சிளம் குழந்தை பிரிவு உட்பட பல பிரிவுகளின் கீழ் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு 100 இளங்கலை மருத்துவ மாணவர்கள்,  டிப்ளமோ மூன்றாண்டு செவிலியர் 100 இருக்கைகள், நான்கு ஆண்டு செவிலியர் பட்டப்படிப்பு 50 இருக்கைகள், முதுகலை பட்டப்படிப்பு 88 மாணவர் சேர்க்கையுடன்  கூடிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக அமைந்துள்ளது.


 


பயிற்சி  மருத்துவர்கள் போரட்டம் 

 

இந்நிலையில் பச்சிளம் குழந்தை பிரிவில் நேற்று முன்தினம் இளங்கலை மருத்துவம் இறுதி ஆண்டு பயிலும் மாணவியிடம், முதுகலை முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட மாணவி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ராஜஸ்ரீ புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் நேற்று காலை 10 மணி அளவில் விசாரணை நடைபெறுவதாக இருந்தது. இதுதொடர்பாக அறிந்த சக மாணவர்கள் முதுகலை மாணவரின் செயலை கண்டித்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவக் கல்லூரி மருத்துவமனை துணைமுதல்வர் அனிதா ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சம்பவம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையை தொடர்ந்து மாணவர்கள் கலைந்து சென்றனர். 


 

மாணவர் இடைநீக்கம் 

 

இதனிடையே சம்பவம் தொடர்பாக விசாரணை குழு அமைக்கப்பட்டு நடைபெற்ற விசாரணையில் துறை ரீதியாக முதுகலை மாணவர் இடைநீக்கம் செய்யப்பட்டு, விசாரணை அறிக்கை இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.