தாய்லாந்து நாட்டிலிருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட அபூர்வ வகை ஆப்பிரிக்க குரங்கு குட்டிகளை, சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் கைப்பற்றினர். அதில் இரண்டு குட்டிகள் உயிரிழந்து விட்டதால், அவைகளை சுங்க அதிகாரிகளை தகனம் செய்தனர். உயிரோடு இருந்த 2  குட்டிகளையும், தாய்லாந்து நாட்டிற்கு விமானத்தில் திருப்பி அனுப்பினர். குரங்கு குட்டிகளை கடத்தி வந்த சென்னையைச் சேர்ந்த பயணியை  சுங்க அதிகாரிகள் கைது செய்து மேலும் விசாரணை.

 

சுங்க அதிகாரிகள் சோதனை

 

தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்க்காக்கிலிருந்து தாய் ஏர்லைன்ஸ் பயணிகள்  விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனை இட்டனர். அப்போது சென்னையைச் சேர்ந்த முகமது நஸ்ருதீன் (28) என்ற பயணி 2 பிளாஸ்டிக் கூடைகளுடன் வந்தார். அந்த பயணி மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவருடைய பிளாஸ்டிக் குடைகளுக்குள், அபூர்வ வகை குரங்கு குட்டிகளான பிக்கி மர்மொசெட் மற்றும் டஸ்கி லீப் வகையைச் சேர்ந்த நான்கு குரங்கு குட்டிகள் இருந்தன. இவைகள் ஆப்பிரிக்க நாட்டு காட்டுப்பகுதிகளில்  வசிக்கும் அபூர்வ வகையைச் சேர்ந்தவை. 



 

குரங்கு குட்டிகளை பறிமுதல்

 

இதை அடுத்து குரங்கு குட்டிகளை கடத்தி வந்த பயணியிடம் சுங்க அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அவர் இவற்றை சர்க்கஸ் கம்பெனிகளில் அதிக விலைக்கு விற்பதற்காக கொண்டு வந்திருப்பதாக கூறினார். அதோடு  இது மிகவும் அபூர்வமானவை. அதிர்ஷ்டமானவையும் கூட. எனவே பெரும் கோடீஸ்வரர்கள் கூண்டுகளில் வைத்து அடைப்பார்கள். எனவே அவர்களிடமும் விற்பனை செய்வதற்காக எடுத்து வந்துள்ளேன், என்று மாறி மாறி பேசினார். மேலும் இதை போன்ற விலங்குகளை வெளிநாட்டில் இருந்து கொண்டு வரும்போது, அதற்கு முறையான ஆவணங்கள், மருத்துவ பரிசோதனை சான்றுகள் போன்றவைகள் இருக்க வேண்டும். அவைகள் எதுவுமே இல்லாததை அடுத்து, சுங்க அதிகாரிகள் அந்த குரங்கு குட்டிகளை பறிமுதல் செய்தனர். அவரையும் கைது செய்தனர். அதன் பின்பு அந்த கூடைகளை திறந்து பார்த்து சோதித்தனார். அப்போது அதில் டஸ்கி லீப் என்ற வகை குரங்கு குட்டிகள் இரண்டும் உயிரிழந்து கிடந்தது. 

 

மத்திய வன குற்றப்பிரிவு 

 

இதை அடுத்து சுங்க அதிகாரிகள் உடனடியாக, சென்னை பெசன்ட் நகரில் உள்ள மத்திய வன குற்றப்பிரிவு போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அதோடு   இறந்துபோன இரண்டு குரங்கு குட்டிகளையும் முறைப்படி இங்கே தகனம் செய்து விடும்படியும், உயிருடன் இருக்கும் இரண்டு குட்டிகளையும் தாய்லாந்து நாட்டுக்கு விமானத்தில் திருப்பி அனுப்பும்படியும், அதற்கான செலவை குரங்கு குட்டிகளை கடத்தி வந்த பயணியிடம் வசூலிக்கும்படிக்கும் கூறினர். 



இதை அடுத்து சுங்க அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ள பயணிக்கு  அபராதம் விதித்தனர். அதோடு உயிரோடு இருந்த இரண்டு குட்டிகளையும், தாய்லாந்து நாட்டுக்கு திருப்பி அனுப்பினர். உயிரிழந்த இரண்டு குரங்கு குட்டிகள் உடல்களையும் செங்கல்பட்டில் மருத்துவக் கழிவுகளை அழிக்கும் தொழிற்சாலைக்கு கொண்டு சென்று, அங்கு பாய்லரில் போட்டு எரித்து சாம்பலாக்கினார். மேலும் குரங்கு குட்டிகளை கடத்தி வந்த பயணியிடம் சுங்க அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.