சென்னை: சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு, அபுதாபியில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று வந்து கொண்டு இருந்தது. இந்த விமானத்தில் 156 பயணிகள் பயணித்துக் கொண்டு இருந்தனர். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, அந்த விமானத்தில் பயணித்த சுமார் 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர், திடீரென கூச்சல் போட்டு கத்தினார். இதை அடுத்து சக பயணிகளும், விமான பணிப்பெண்களும் அந்த இளம் பெண்ணிடம் என்ன நடந்தது? என்று கேட்டனர்.
தொடக்கூடாத இடங்களில் தொட்டு
அப்போது அந்த இளம் பெண், விமானத்தில் தனது இருக்கைக்கு பின் இருக்கையில் அமர்ந்துள்ள ஒரு ஆண் பயணி, இருக்கைகளுக்கு இடையே கையை விட்டு, தன்னை தொடக்கூடாத இடங்களில் தொட்டு, பாலியல் தொல்லை கொடுப்பதாக பதற்றத்துடன் கூறினார். இதை அடுத்து அந்த இளைஞரை, விமான பணிப்பெண்கள், சக பயணிகளும் கடுமையாக கண்டித்தனர். அப்போது அந்த இளைஞர் தூக்கத்தில், தவறுதலாக கை பட்டு விட்டது என்று கூறினார். ஆனால் அந்த இளம் பெண், இளைஞர் பொய் சொல்கிறார். ஒருமுறை அல்ல, தொடர்ந்து சில முறை, அவருடைய கைகள், என்னை நோக்கி வந்தன. நான் அவருடைய கைகளை பலமுறை தட்டி விட்டேன். ஆனாலும் தொடர்ந்து அவர் அதை போல் செய்தார் என்று புகார் கூறினார்.
அது ஒரு குற்றமா ?
இதையடுத்து விமான பணிப்பெண்கள், விமான கேப்டனுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே விமான கேப்டன் சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்து, பாதுகாப்பு அதிகாரிகளை தயார் நிலையில் இருக்கும்படி செய்தார். அதன்பின்பு அந்த விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வந்து தரையிறங்கியது. உடனடியாக விமான பாதுகாப்பு அதிகாரிகள், விமானத்துக்குள் ஏறி, பெண் பயணிக்கு விமானத்துக்குள் தொல்லை கொடுத்த, இளைஞரை சுற்றி வளைத்து பிடித்தனர். அதோடு அவரை பாதுகாப்புடன் சுங்கச் சோதனை, குடியுரிமைச் சோதனைகளை முடித்த பின்பு, விமான நிலையத்தில் உள்ள அலுவலகத்தில் வைத்து விசாரித்தனர். அப்போது அந்த இளைஞர், பயணிகள் விமானத்தில், சக பயணியின் மீது தெரியாமல் கைகள் படத்தான் செய்யும், அது ஒரு குற்றமா? என்று கேள்வி எழுப்பினார். இதை அடுத்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் பாதுகாப்பு அதிகாரிகள், அந்த இளைஞரை சென்னை விமான நிலைய போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதோடு அந்த இளைஞர் மீது புகார் கொடுப்பதற்காக அந்தப் பெண் பயணியும் போலீஸ் நிலையம் சென்றார்.
திடீரென பல்டி
இதற்கு இடையே விமானத்தில் வீராப்பு பேசிய அந்த இளைஞர், போலீஸ் நிலையம் வந்ததும், திடீரென பல்டி அடித்தார். ஏதோ தெரியாமல் செய்து விட்டேன், என்னை மன்னித்து விடுங்கள், என்று கதறி அழுதார். அதோடு அந்த பெண் பயணியிடமும், மன்னிப்பு கேட்டு, நான் ஹவுஸ் கீப்பிங் வேலை செய்துவிட்டு, விடுமுறையில் சொந்த ஊர் வருகிறேன். நீங்கள் புகார் செய்தால், என் வேலையும் போய்விடும் என்று கூறி அழுதார். பெண் பயணி, சென்னை விமான நிலைய போலீசில் எழுத்து மூலமாக புகார் செய்தார். இதை அடுத்து சென்னை விமான நிலைய போலீசார், பெண் பயணியின் புகாரை பதிவு செய்தனர். அந்த இளைஞரை பிடித்து விசாரித்தனர். அந்த இளைஞரின் பெயர் சக்தி (28). இவர் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்தவர். சவுதி அரேபியாவில் கூலி வேலை செய்து வந்தார். தற்போது விடுமுறையில் சொந்த ஊர் திரும்பி கொண்டிருக்கிறார் என்று தெரிய வந்தது. இதை அடுத்து விமானத்துக்குள் பெண் பயணியிடம் சில்மிஷம் செய்து பாலியல் தொல்லை கொடுத்த சக்தியை பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டம், விமான பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட சில பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர். அதோடு அவரை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.