சென்னை விமான நிலையத்தில், கொல்கத்தா செல்ல இருந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், மேற்குவங்க மாநில பயணி ஒருவர், சீட் பெல்ட் அணிய மறுத்து, விமான பணிப்பெண்களிடம் வாக்குவாதம் செய்ததால், விமானத்திலிருந்து கீழே இறக்கப்பட்டு, போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.
டிரான்சிட் பயணி
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்தவர் சர்போஜீத் பவுல்தாஸ் (31). இவர் தமிழ்நாட்டில் கோவையில் ஒரு தனியார் டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் சர்போஜித் பவுல் தாஸ், அவருடைய சொந்த ஊருக்கு போவதற்காக, நேற்று மாலை இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், கோவையில் இருந்து டிரான்சிட் பயணியாக, சென்னைக்கு வந்துவிட்டு, மீண்டும் நேற்று இரவு சென்னையில் இருந்து, மற்றொரு இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், கொல்கத்தா செல்வதற்காக விமானத்தில் ஏறி அமர்ந்தார்.
எதற்காக சீட் பெல்ட் போட வேண்டும் ?
சென்னையில் இருந்து விமானம் புறப்படுவதற்கு முன்னதாக, விமான பணிப்பெண்கள், பயணிகள் அனைவரும் சீட் பெல்ட் அணியும்படி கூறினர். ஆனால் சர்போஜித் பவுல் தாஸ், சீட் பெல்ட் அணிய மறுத்ததோடு, எதற்காக சீட் பெல்ட் போட வேண்டும் என்று விமான பணிப்பெண்கள் இடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டார். இதை அடுத்து விமான பணிப்பெண்கள், அந்தப் பயணி குறித்து, விமான கேப்டனிடம் புகார் செய்தனர்.
உடனடியாக விமான கேப்டன், சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். இதை அடுத்து விமானத்தின் கதவுகள் திறக்கப்பட்டன. விமான பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்துக்குள் ஏறி, பயணி சர்போஜித் பவுல் தாஸை, விமானத்திலிருந்து கீழே இறக்கின்றனர். அதோடு அவருடைய கொல்கத்தா விமான பயணமும் ரத்து செய்யப்பட்டது. அதன் பின்பு அந்த விமானம் மற்ற பயணிகளுடன், சுமார் அரை மணி நேரம் தாமதமாக, சென்னையில் இருந்து கொல்கத்தா புறப்பட்டு சென்றது.
கைது செய்து
இந்தநிலையில் பயணி சர்போஜித் பவுல்தாஸ், விமான பாதுகாப்பு சட்ட விதிமுறையை மீறி, சீட் பெல்ட் அணிய மறுத்ததோடு, விமான பணிப்பெண்கள் இடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சண்டை போட்டார் என்று, சென்னை விமான நிலைய போலீசில், இண்டிகோ ஏர்லைன்ஸ் பாதுகாப்பு அதிகாரிகள் ஒப்படைத்தனர். சென்னை விமான நிலைய போலீசார், சர்போஜீத் பவுல் தாஸை கைது செய்து, மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். விமானத்தில் சீட் பெல்ட் அணிய மறுத்து, விமான பணிப்பெண்கள் இடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பயணி ஒருவர், விமானத்திலிருந்து கீழே இறக்கப்பட்டு, போலீசில் ஒப்படைக்கப்பட்ட சம்பவம், சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.