கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய பேருந்துகள் ஏற்பாடு செய்து தரவில்லை என பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் - Kilambakkam bus terminus
தென் மாவட்டம் செல்லும் பயணிகளுக்கு கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு, மாற்றாக கிளாம்பாக்கத்தில் சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளது. தினமும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் பயணிகள் பேருந்து நிலையத்தை பயன்படுத்துகின்றனர். வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்கள், சுப முகூர்த்த நாட்களில் 80 ஆயிரம் பயணிகள் வரை பயன்படுத்துகின்றனர்.
இன்னும் சில ஆண்டுகளில் பேருந்து நிலையத்தை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிக்கல்கள் படிப்படியாக தீர்க்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக பேருந்து சேவைகள் அதிகரிக்கப்பட்டு வருகிறது. வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று வருவது வழக்கம். அவர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு வார இறுதி நாட்களில் கூடுதலாக பேருந்துகளை இயக்குவது வழக்கம் ஆகும்.
சிறப்பு பேருந்துகள்:
இந்த சூழலில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, அரசு விரைவுப் போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் மோகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,
20ம் தேதி (சனிக்கிழமை மற்றும் பௌர்ணமி) மற்றும் 21ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையில் இருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களில் இருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, நெல்லை, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு நாளை 260 பேருந்துகளும், 20ம் தேதி 585 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது.
திருவண்ணாமலைக்கு 50 ஏ.சி. பேருந்துகள்
சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூர் ஆகிய இடங்களுக்கு நாளை 45 பேருந்துகளும், 20ம் தேதி 45 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களுக்கு இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் மூலமாக இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட 50 ஏ.சி. பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு நாளை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னை, மதுரை, சேலம், கோவை, ஈரோடு, திருப்பூர், நெல்லை, நாகர்கோயில், தென்காசி, தூத்துக்குடி மற்றும் பெங்களூர் ஆகிய இடங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து 585 பேருந்துகள் பல்வேறு ஊர்களுக்கு இயக்கப்பட்டன.
பேருந்து சிறை பிடித்து மக்கள் போராட்டம்
கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் தென் மாவட்டத்திற்கு செல்ல போதிய அளவு பேருந்து இல்லாததால் ஆத்திரமடைந்த மக்கள் நள்ளிரவில் திடீரென பேருந்து சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பௌர்ணமி, ஆடி மாத முதல் ஞாயிறு உள்ளிட்ட விசேஷ நாட்களை முன்னிட்டு பேருந்து நிலையத்திலிருந்து கூடுதலாக திருவண்ணாமலைக்கு பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில் மற்ற ஊர்களுக்கு பேருந்து போதிய அளவில் இல்லை என மக்கள் குற்றச்சாட்டை முன்வைத்து பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து ஊழியர்கள் மற்றும் காவல் துறையினர் சமாதானம் பேச்சு வார்த்தையை தொடர்ந்து வேறு மாற்று பேருந்து இயக்கப்பட்டு பொதுமக்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்