12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் தோல்வி அடைந்த மாணவி, நீட் நுழைவுத் தேர்வில் 705 மதிப்பெண்கள் பெற்ற விவரம் வெளியாகி, கேட்போரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
நகரங்கள், தேர்வு மையங்கள் வாரியாக நீட் இளநிலைத் தேர்வு முடிவுகள் நேற்று (ஜூலை 20) வெளியாகின. ஏராளமான சமூக ஊடக பயனர்கள், தங்களின் மதிப்பெண்களைப் பகிர்ந்து வருகின்றனர். இதில் குஜராத்தைச் சேர்ந்த ஒரு மாணவியின் மதிப்பெண்கள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளன.
இதுகுறித்துத் தனியார் ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியின்படி, அகமதாபாத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் அருகில் உள்ள கோச்சில் மையத்தில் சேர்ந்துள்ளார். கோச்சிங் படிக்க, அருகிலேயே இருந்த பள்ளி ஒன்றில் டம்மியாக சேர்ந்துள்ளார். கோச்சிங் மையத்தில் அந்த மாணவி குறைந்த மதிப்பெண்கள் பெற்றதால், 2 மாதத்திலேயே அவர் பள்ளிப் படிப்பைத் தொடர அறிவுறுத்தப்பட்டதாகக் கூறப்பட்டது.
பிளஸ் 2-ல் ஃபெயில்; நீட் தேர்வில் 720-க்கு 705 மதிப்பெண்கள்
இயற்பியல் பாடத்தில் 21 மதிப்பெண்கள், வேதியியலில் 31 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். உயிரியல் பாடத்தில் 39 மதிப்பெண்களும் ஆங்கிலத்தில் 59 மதிப்பெண்களும் பெற்றுள்ளார். அந்த மாணவியின் பெற்றோர்கள் இருவரும் மருத்துவர்கள் என்று கூறப்படுகிறது.
எனினும் நீட் தேர்வு முடிவுகளில் 720 மதிப்பெண்களுக்கு 705 மதிப்பெண்கள் பெற்று குஜராத் மாநிலத்தில் சிறந்த மாணவராகத் தேர்ச்சி பெற்றுள்ளார். இயற்பியலில் 99.8 பர்சண்டைல், வேதியியலில் 99.1 பர்சண்டைல், உயிரியியல் 99.1 பர்சண்டைல் என ஒட்டுமொத்தமாக 99.9 பர்சண்டைல் மதிப்பெண்களைப் பெற்றுள்ளார்.
மருத்துவக் கல்லூரிகளில் சேர முடியாத நிலை
இந்த பர்சண்டைல் மூலம் இந்தியாவின் தலைசிறந்த கல்லூரிகளில் அவருக்கு சேர்க்கை கிடைக்க வாய்ப்புள்ளது. எனினும் 12ஆம் வகுப்பில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களை சம்பந்தப்பட்ட மாணவர் பெற்றிருக்க வேண்டும் என்பதால், அவரால் மருத்துவக் கல்லூரிகளில் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனினும் அவரின் 12ஆம் வகுப்பு மதிப்பெண்ணும் நீட் தேர்வு மதிப்பெண்ணும் ஒருவருடையதுதானா என்பது இன்னும் முறையாக உறுதி செய்யப்படவில்லை.
நீட் தேர்வு முறைகேடுகள், வினாத்தாள் கசிவு குறித்து உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடந்துவருகிறது. இதில், 2024 நீட் தேர்வு முடிவுகளை நகரம், தேர்வு மையங்கள் வாரியாகத் தனித்தனியாக சனிக்கிழமை மதியத்துக்குள் மணிக்குள் வெளியிட வேண்டும் என்று தேசியத் தேர்வுகள் முகமைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. எனினும் மாணவர்களின் விவரங்களை வெளியிடத் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்துத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின.
நாளை நீட் தேர்வு முறைகேடு வழக்கு விசாரணை
தொடர்ந்து நீட் தேர்வு முறைகேடு, வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்கு விசாரணை நாளை (ஜூலை 22) நடைபெற உள்ளது.