பல்லாவரம் அருகே மருந்து விற்பனை செய்யும் இளைஞரை போலீஸ் என கூறி மிரட்டி பணம் பறித்த கும்பல் கைது,  போலீஸ் போல் வாக்கி - டாக்கி கைவிலங்கு, துப்பாக்கி வைத்து மிரட்டியது விசாரணையில் தெரியவந்தது, பணம் பறிப்பு செயலில் ஈடுபட்ட 9 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்


நாங்க போலீஸ்..!


சென்னை பல்லாவரம் அருகே உள்ள திருமுடிவாக்கம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் அசாருதீன் . இவர் மருந்து வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். கடந்த 22.06.2024-ம் தேதி வழக்கம்போல இரவு கம்பெனியில், இருந்து அவரது டிரைவரான ரபீக் என்பவருடன் இருச்சக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது ரபீக்  S.R பெட்ரோல் பங்க் அருகில் வரை உடன் வந்துள்ளார்.


அதன் பின்னர் தான் இரவு 11.15 மணியளவில் திருமுடிவாக்கம் மெயின்ரோடு அடையாறு ஆற்றுப்பாலம் முன்பு அசாருதீன் தனியாக வந்து கொண்டிருந்தபோது , பின்னால் வெள்ளை நிற காரில் வந்த நபர்கள் அசாருதீன் வாகனத்தை  நிறுத்தி போலீஸ் என்று கூறி வண்டியில் ஏறச்சொல்லி உள்ளனர்.


மிரட்டி பணம் பறிப்பு


இதில் அவர் சந்தேகமடைந்து வாகனத்தில் ஏற மறுத்தபோது, வாகனத்தில் இருந்து இறங்கிய நபர் தனது கையில் கைவிலங்கை மாட்டி அசாருதீனை அடித்து காரில் ஏற்றியுள்ளனர்.  காரில் இருந்த நபர்களும் சராமாரியாக கையால் தாக்கி, கண்ணை கட்டி காரில், அழைத்து சென்று ஒரு சுடுகாடு அருகில் இறக்கி போலீஸ் தோரணையில்  விசாரணை செய்துள்ளனர்.


அசாரூதீனிடம் நீ சட்டவிரோதமாக மருந்து விற்கிறாய் எனக்கூறி பணம் 50 லட்சம் கேட்டுள்ளனர். அசாருதீன் பயந்து, 25 லட்சம் பணம் தருவதாக ஒப்புக்கொண்ட போது, அசாருதீன் செல்போன் மூலம் பணத்தை எடுக்க முயற்சி செய்து அது முடியாமல் போனதால்,  மிரட்டி தனது பர்சில் இருந்த 9,000/- மற்றும் கிரடிட் கார்டு , டெபிட் கார்டை எடுத்துக்கொண்டனர் என புகாரில் கூறியுள்ளார்.


பின்னர் இரவு மூழூவதும் காரில் சுற்றி அடுத்த நாள் காலை ஆற்காடு பகுதியில் வைத்து அசாரூதீனின் வங்கி கணக்கில் இருந்து அந்தோணிராஜ் என்பவர் கணக்கிற்கு 50,000/- அனுப்பியபிறகு அங்கேயே இறக்கி விட்டுவிட்டுள்ளனர். அசாரூதீன் வீட்டிற்கு வந்து வங்கி பரிவர்த்தனை பார்த்தபோது அவர்கள் கிரடிட் மற்றும்   டெபிட் கார்டு மூலம் 1,30,000/- ATM மூலமும் மேலும் 6,10,000/- க்கு ஆன்லைன் பர்ச்சேஸ் செய்து எடுத்துள்ளனர்.  இது பற்றி வெளியே சொன்னால் எதாவது செய்துவிடுவார்கள் என்று புகார் அளிக்காமல் பணம் போனால் போகட்டும் என்று அசாருதீன் விட்டுவிட்டார்


 9 பேர் கைது


கடந்த 1ந்தேதி  தேதி ஒரு நபர்  மீண்டும் பணம் கேட்டு மிரட்டியதால் பயந்து போன அசாருதீன் சங்கர் நகர் காவல் நிலையத்தில் நடந்த சம்பவங்களை புகாராக அளித்தார். இது தொடர்பாக சங்கர் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து போலீஸ் போல் நடித்து பணம் பறித்த குன்றத்தூர் கொலைச்சேரி பகுதியை சேர்ந்த அருண்குமார், பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த கார்மேகம் , காஞ்சிபுரத்தை சேர்ந்த சதாம், குன்றத்துரை சேர்ந்த அந்தோணி ராஜ், பம்மல் நேதாஜி தெருவை சேர்ந்த முகமது ரஃபி , பல்லாவரம் மீனாட்சி நகரை சேர்ந்த இம்ரான்,பம்மலை சேர்ந்த எஸ்வந்த், பம்மலை சேர்ந்த சதீஷ், ஜமீன் பல்லாவரத்தை சேர்ந்த வேலு ஆகிய 9 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து வாக்கி டாக்கி, துப்பாக்கி ,கைவிலங்கு, செல்போன்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.


இந்த கும்பல் மேலும் பலரிடம தங்களுடைய கைவரிசையை காட்டியதாக தெரிகிறது. அது விசாரணையில் வெளியே வரும் என்றாலும் பணத்தை பறிகொடுத்தவர்கள் தாமாக முன்வந்து புகார் கொடுத்தால் அவர்கள் எத்தனை பேரை மிரட்டி, எவ்வளவு பணம் பறித்துள்ளனனர் என்பது தெரியும்