செங்கல்பட்டு மாவட்டம் வேம்பாக்கம் பகுதியில் தனியார் கல்லூரியில் பி காம் மூன்றாம் ஆண்டு படித்து வருபவர் ஸ்வேதா. இவர் தனியார் கல்லூரியில் பி காம் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.இணையதளத்தில் இன்ஸ்டாகிராம் என்ற செயலில் உள்ள ரீல்ஸில் அடிக்கடி சினிமா வசனங்கள் பாடல்கள் உள்ளிட்டவற்றை டப்ஸ்மாஷ் செய்து வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

 

இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஸ்வேதா  டப்ஸ்மாஷ் செய்து வெளியிட்ட வீடியோக்களை அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் தன்னுடன் அந்த வீடியோக்களில் இணைத்து டப்ஸ்மாஷ் செய்து வெளியிட்டதாக கூறப்படுகிறது.



இதை பார்த்த, அந்த பெண்ணின் தோழிகள் மற்றும் நண்பர்கள் விசாரித்துள்ளார். இதுகுறித்து அந்த பெண்ணிடம் அவருடைய அண்ணன் மோகனும் விசாரித்ததாக தெரிகிறது . இதில் மனமுடைந்த அந்த பெண், வீட்டிலிருந்து வெளியே சென்றவர், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவரை, உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளில், பெற்றோர் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில், அதே பகுதி விவசாய கிணற்றில், நீரில் மூழ்கி நேற்று இறந்து மிதந்தார்.

 

 

இது குறித்து பெண்ணின் பெற்றோர்  தங்களுடைய மகள் உயிரிழப்புக்கு காரணம் இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்ட வீடியோ தான் காரணம் என போலீசில் புகார் அளித்தனர். புகாரைப் பெற்றுக் கொண்ட செங்கல்பட்டு தாலுக்கா போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த விசாரணை கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் நேற்று விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து செங்கல்பட்டு துணை கண்காணிப்பாளர் ஆதர்ஷ் அப்பெண்ணின் குடும்பத்தினரிடம் மற்றும் சந்தேகப்படும் இளைஞரிடம் விசாரணை மேற்கொண்டார் .

 



இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமாரிடம் கேட்டபொழுது, இன்ஸ்டாகிராமில் தவறாக சித்தரித்து போடப்பட்ட காரணத்தினால் தற்கொலை செய்து கொண்டதாக பெற்றோர் தரப்பில் இருந்து கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது. சைபர்  கிரைம் போலீசார் மற்றும் சில ஏஜென்சிகளின் உதவியுடன் அந்த போலி கணக்குகளை தற்பொழுது தேடி வருகிறோம் என தெரிவித்தார்.

 

இணையதளம் மூலமாக நடைபெற்ற குற்றம் என்பதால் செங்கல்பட்டு மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் இணைந்து விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.










வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டங்கள் என்ன பிரச்சனைகளை சந்தித்தாலும் தற்கொலை தீர்வு இல்லை என்பதே மருத்துவர்களின் கருத்து. எக்காரணம் கொண்டும் மனம் அழுத்தம் ஏற்பட்டாலும் பிரச்சனைகள் ஏற்பட்டாலும் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் வரக்கூடாது. அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்க்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050