தமிழ்நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. முன்னதாக, கடந்த 7-ந் தேதி வரை எந்த தளர்வுகளும் இல்லாத முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அப்போது, சென்னை சேத்துப்பட்டில் போக்குவரத்து போலீசார் வாகன பரிசோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, இளம்பெண் ஒருவர் காரில் முகக்கவசம் அணியாமல் வந்தார். அவரைத் தடுத்து நிறுத்திய போலீசார், ஊரடங்கு விதிகளை மீறியதற்காக அந்த பெண்ணிற்கு அபராதமாக ரூபாய் 500 விதிப்பதாக கூறினர். ஆனால், அந்த பெண் அபராதத்தை கட்டாமல் போலீசாரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும்,  அந்த பெண் அவரது தாயாரிடம் போன் செய்து தகவலை கூறினார்.


இதையடுத்து, பி.எம்.டபிள்யூ காரில் சம்பவ இடத்திற்கு வந்த அவரது தாயார் போலீசாரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தான் ஒரு வழக்கறிஞர் என்றும், அபராதம் கட்ட முடியாது என்றும் போலீசாரிடம் ஆத்திரத்துடன் பேசினார். மேலும், போலீசார் முகக்கவசம் அணிந்து பேசுங்கள் என்று கூறியதற்கும் மறுப்பு தெரிவித்ததுடன், `நான் யார்னு காட்டுறேன். மவனே. உன் யூனிபார்மை கழட்டுறேன்… பாக்குறீயா..?’என்று ஒருமையில் பேசினார். இதை வீடியோ எடுத்த போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும், பெண் வழக்கறிஞர் பேசியது சமூக வலைதளங்களில் வைரலானது.




அவர் மீது பொது இடங்களில் அசிங்கமாக பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல், அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்தல், தொற்றுநோய் பரவல் சட்டம், அரசு உத்தரவை மீறி செயல்படுத்தல், தொற்று நோய் பரப்பக்கூடிய தீய எண்ணத்தில் செயல்படுதல் உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பெண் வழக்கறிஞரின் செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கடுமையாக தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர். மேலும், ஊரடங்கு நேரத்தில் ஒரு வழக்கறிஞர் 24 மணிநேரமும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போலீசாரிடம் இவ்வாறு நடந்து கொண்டிருப்பது வேதனை அளிப்பதாகவும் பலர் கண்டனம் தெரிவித்தனர்.


இந்த நிலையில், அந்த பெண் வழக்கறிஞரான தனுஜா ராஜா சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவை விசாரித்த நீதிபதி செல்வக்குமார் கூறியதாவது, பெண் வழக்கறிஞரின் செயல்பாடு சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுபோன்ற சம்பவத்தில் முன்ஜாமீன் தந்தால் தவறான முன்னுதாரணம் ஆகிவிடும். எனவே, பெண் வழக்கறிஞர் மற்றும் அவரது மகளின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டார்.




அதே பெண் வழக்கறிஞர் தனுஜாராஜா கடந்தாண்டு ஊரடங்கு அமலில் இருந்தபோதும், இதே போன்று போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், போக்குவரத்துக்கு இடையூறாக செயல்பட்டதும் வீடியோ ஒன்று மூலம் அம்பலத்திற்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.