பங்குச்சந்தை அல்லது முதலீட்டை குறித்து சிந்திப்பவர்களுக்கு வாரன் பஃபெட்டை தெரியாமல் இருக்க முடியாது. இன்று 91-ம் பிறந்த நாள் அவருக்கு.


கொஞ்சம் பணம் சேர்ந்துவிட்டால் ஆடம்பர வாழ்க்கைக்கு திரும்புகிறோம். சர்வதேச அளவில் பெரும் பணக்காரராக இருந்தாலும் எளிமையான வாழ்க்கையை வாழ்கிறார் பஃபெட். 1958-ம் ஆண்டு முதல் அதே வீட்டில் வாழ்கிறார். எளிமையாக கார்களையே பயன்படுத்துகிறார். இவரின் சொத்து மதிப்பு 103 பில்லியன் டாலர்.


தன்னுடைய 13 வயதில் இருந்து வருமான வரி செலுத்தி வருகிறார். 70 ஆண்டுகளுக்கு மேலாக பங்குச்சந்தையில் முதலீடு செய்துவருகிறார். அமெரிக்காவில் மட்டுமல்லாமல் இந்தியாவில் பேடிஎம் உள்ளிட்ட சில நிறுவனங்களிலும் வாரன் பஃபெட் முதலீடு செய்திருக்கிறார்.


வாரன் பபெட் பேசிய அனைத்துமே முதலீட்டாளர்களுக்கு மந்திரங்களே. தற்போதைய காலத்தில் அவரது முதலீடு யுத்திகள் சில பயன் அளிக்காவிட்டாலும், (ஐபிஓவில் முதலீடு செய்யக்கூடாது என்பது இவரது கொள்கை, ஆனால் தற்போது ஐபிஓ முதலீடுகள் பெரும் லாபத்தை கொடுத்து வருகின்றன) இவருடைய பேசிய அனைத்துமே முத்துகள்தான்


* பணத்தை இழக்காதீர்கள்: பணத்தை இழக்க வேண்டாம் என்னும் விதியை மறக்காதீர்கள்


* என்ன செய்கிறோம் என்பது புரியாமல் இருப்பதுதான் மிகப்பெரிய ரிஸ்க்


* உங்களால் புரிந்துகொள்ளமுடியாத தொழிலில் முதலீடு செய்யாதீர்கள்


* பொறுமையாக காத்திருப்பவர்களுக்கு  பணம் சேரும் என்னும் அடிப்படையிலே பங்குச்சந்தை வடிவமைக்கப்பட்டிருக்கிறது


* ஒரு பங்கில் 10 ஆண்டுகள் முதலீடு செய்யும் திட்டமில்லை என்றால் பத்து நிமிடம் கூட முதலீடு செய்யாதீர்கள்


* நாம் நிச்சமற்ற சூழலில் வாழ்கிறோம். எது நிச்சயம் என்றால் அமெரிக்கா தொடர்ந்து வளர்ச்சி அடையும் என்பதுதான்.


* நேர்மை என்பது மிகப்பெரிய பரிசு, அதனை அனைவரிடமும் எதிர்பார்க்காதீர்கள்


* தேவையில்லாத பொருட்களை வாங்கி குவித்தால் தேவையான பொருட்களை விற்க வேண்டியிருக்கும்.


* பங்குகளை சரியான விலையில் வாங்குவதுதான் முக்கியம். சிறப்பான நிறுவன பங்குகளை அதிக விலை கொடுத்து வாங்குவதில் எந்த பயனும் இல்லை


* மோசமான நபர்களிடம் இருந்து சிறப்பான டீல் கிடைக்காது.