செங்கல்பட்டு மாவட்டம் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாரதபுரம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரின் மகன் ராஜேஷ் கண்ணா வயது 28. இவர் தனது நண்பர்களான கார்த்திக், மோகன்ராஜ் உள்ளிட்ட நண்பர்களுடன் அருகே உள்ள சமுதாய கூடத்தில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலை அருகே உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தபோது, காரில் வந்த மூன்றுக்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் ராஜேஷ் கண்ணாவை  கத்தியால் வெட்டி கொலை செய்ததாக கூறப்படுகிறது.

 


 

அப்பொழுது தடுக்க முயன்ற கார்த்திக், மோகன்ராஜ் இருவரையும் கத்தியால் கை மற்றும் கால்களில் வெட்டிவிட்டு தப்பி தலைமறைவு ஆகிவிட்டனர். செங்கல்பட்டு தாலுகா போலீசார் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில் ஏழு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  மலாலிநத்தம் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் 41, பார்த்திபன் 27, லோகேஷ் 21, ராஜேஷ் 22, அஜித் 25, ஜீவா 20, ரமேஷ் 26 ஆகிய 7 பேரையும் செங்கல்பட்டு தாலுகா காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலை சம்பவம் நடைபெற்று 15 மணி நேரத்திற்குள்ளாக கொலைக்கு காரணமான ஏழு பேரை காவல்துறையினர் கைது செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 


 

இதுகுறித்து காவல்துறை வட்டாரங்களில் தொடர்பு கொண்டு விசாரித்த பொழுது, செங்கல்பட் மாவட்டம் வல்லம் அடுத்த பாரதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் என்பவரின் மகன் ராஜேஷ் கண்ணா, இரண்டு வருடங்களுக்கு பிறகு சிலை வைக்க அனுமதி கொடுத்த காரணத்தினால் இவர் மட்டும் இவருடைய நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு அப்பகுதியில் உள்ள சமுதாயக் கூடத்தில் விநாயகர் சிலை நிறுவியுள்ளார். இதனை தொடர்ந்து விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகர் சிலை அருகே நள்ளிரவு அமர்ந்து நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த பொழுது அடையாளம் தெரியாத நபர்கள் காரில் வந்து கொலை செய்துவிட்டு தப்பி சென்றனர். இதனை அடுத்து, உயிர்பிழைத்த கார்த்தி மற்றும் மோகன்ராஜ் ஆகிய இருவரிடம் தீவிர விசாரணை  மேற்கொண்டதில் முன் பகை காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என தெரியவந்தது.

 


 

நள்ளிரவில் விநாயகர் சிலைக்கு மூன்று பேரும் காவலில் இருந்த பொழுது தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. முன்னதாக நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு ராஜேஷ் கண்ணா மது அருந்தியதாக தெரியவந்தது. மது அருந்தும் பொழுது அப்பகுதியை சேர்ந்த சிலர் யார் இந்த இடத்தில் மது அருந்துகிறீர்கள் என முகத்தில் டார்ச் அடித்து பார்த்ததாக தெரிகிறது. இதனால் கோபம் அடைந்த ராஜேஷ் கண்ணா தரப்பிற்கும் மற்றொரு தரப்பிற்கும் மோதல் ஏற்பட்டுள்ளது.



 

இந்த மோதலின் காரணமாகவே இந்த கொலை நடந்திருக்கிறது என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.