செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் கீழ்க்காரணை பகுதியை சேர்ந்தவர் கபாலி. இவரது மகன் கார்த்திக் (21) தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இவரோடு கர்நாடகா மாநிலம் சிக்மங்களூர் பகுதியை சேர்ந்த பொன்னப்பன் என்பவரது மகன் லோகேஷ் (22) என்பவரும் பணியாற்றி வருகிறார். லோகேஷ் தனது நண்பர்களுடன் கார்த்திக்கின் சித்தி வீட்டு மாடியில் வாடகைக்கு தங்கி வேலை பார்த்து வருகிறார். கார்த்திக் தினசரி லோகேஷ் ரூமிற்கு அடிக்கடி செல்வது வழக்கம். லோகேஷும் கார்த்திக்கும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள்.
ஒருவர் பிரிய முடியாமல் பழகி
இதுவே நாளடைவில் தன்பாலின உறவு வரை சென்றது. இதில் ஒருவரை ஒருவர் பிரிய முடியாமல் பழகி வந்தனர். இதற்கிடையில் லோகேஷ் உடன் தங்கியிருந்த நபர்கள் இந்த ரூமை விட்டு வேறு இடம் சென்று விட்டனர். அதன் பிறகு கார்த்திக் அவரது அப்பா அம்மாவோடு வீட்டில் தங்காமல் கடந்த மூன்று மாதமாக லோகேஷ் ரூமிலேயே நிரந்தரமாக தங்கிவிட்டார். கார்த்திக்கின் பெற்றோர் வீட்டுக்கு வரச்சொல்லி வலியுறுத்தியும் வீட்டுக்கு வராமல் லோகேஷோடு அங்கேயே தங்கி ஒன்றாகவே வேலைக்கு செல்வது ஒன்றாக வருவது என வாழ்ந்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் லோகேஷ் கார்த்திக்கிடம் இருந்து விலக முடிவு செய்து சொந்த ஊரான சிக்மங்களூர் சென்றுவிட்டார். கார்த்திக் லோகேஷை மறக்க முடியாமல் சிக்மங்களூருக்கே தேடி சென்று லோகேஷை மீண்டும் அழைத்து வந்துவிட்டார். இதுகுறித்து கார்த்திக் வீட்டுக்கு தெரிந்து கார்த்திக் லோகேஷை பிரிக்க திட்டமிட்டு சில தினங்களுக்கு முன்பு கார்த்திக்கை கண்டித்துள்ளனர்.
வேலைக்கு செல்லாமல்
அதனால் மன உளச்சலோடு இருந்து வந்த கார்த்திக் நேற்று காலை வேலைக்கு செல்லாமல் வீட்டில் தங்கிவிட்டார். லோகேஷ் மட்டும் வேலைக்கு சென்றுவிட்டு திரும்ப வந்து பார்த்த போது வீட்டில் கார்த்திக் இல்லை.
அவர்கள் இருவரும் ஜோடியாக சுற்றித்திரிந்து வந்த இடங்களில் எல்லாம் லோகேஷ் கார்த்திக்கை தேடிவந்துள்ளார். கார்த்திக் கிடைக்காததால் லோகேஷ் நண்பனை காணவில்லை என மறைமலைநகர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார் .
மீண்டும் தொடர்ந்து கார்த்திக்கை தேடிய போது சிங்கபெருமாள் கோயில் அருகே உள்ள கிணற்றின் அருகே கார்த்திக் செருப்பு இருப்பதை கண்டவுடன், இந்த கிணற்றில்தான் கார்த்திக் உடல் இருக்கிறது என் நண்பனை மீட்டு தாருங்கள் என தீயணைப்பு துறையினரிடம் உதவி கேட்டுள்ளார்.
அதனை தொடர்ந்து மறைமலைநகர் காவல் நிலையத்திலும், கார்த்திக்கின் சடலம் கிடப்பதாக லோகேஷ் கூறியதன் அடிப்படையில் தீயணைப்பு துறையினர் கார்த்திக்கின் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்தனர். லோகேஷ் ரூமை சோதனையிட்டபோது ஒருகடிதம் கிடைத்துள்ளது. அந்த கடிதம் கார்த்திக் கைப்பட எழுதியதா?, கார்த்திக் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தவறி விழுந்து இறந்தாரா என போலீசார் லோகேஷிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Suicidal Trigger Warning
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)