தமிழ் சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரங்கள் மூலம் திரையில் தலைகாட்டி பின்னர் ஹீரோவாக வாய்ப்பு கிடைத்து சுப்ரீம் ஸ்டார் என்ற அந்தஸ்த்தில் கொடி கட்டி பறந்தவர் நடிகர் சரத்குமார். இன்றும் பிஸியான ஒரு நடிகராக நடித்து வரும் சரத்குமார் தனது 69வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.


சரத்குமார் என்றாலே கட்டுக்கோப்பான உடல் தான் பிரதானம். அதை மெயின்டெய்ன் செய்வதில் சிறு வயது முதலே ஆர்வம் கொண்டு இருந்தவர் இந்த வயதிலும் மிகவும் ஃபிட்டான ஒரு பர்சனாலிட்டியாக வலம் வருகிறார். அவரின் கல்லூரி காலகட்டங்களிலேயே மிஸ்டர் மெட்ராஸ் பட்டம் வென்ற ஆணழகன். பத்திரிகை விநியோகம் செய்து கொண்டு இருந்தவர் பின்னர் நிருபராக பணியாற்றி வந்தார்.


தெலுங்கு திரைப்படம் ஒன்றில் 1986ம் ஆண்டு ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார் . அதனை தொடர்ந்து ஒரு சில படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்தவருக்கு தமிழ் சினிமாவில் வில்லனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.  'புலன் விசாரணை' படத்தில் இயக்குனர் ஆர்.கே.செல்வமணி வில்லனாக சரத்குமாரை அறிமுகம் செய்து வைத்தார். அப்படம் அவருக்கு நல்ல வரவேற்பையும் விருதையும் பெற்றுத்தந்தது.


பல படங்களில் துணை கதாபாத்திரங்களிலும் கௌரவ கதாபத்திரங்களிலும் நடித்த சரத்குமாரை 'சேரன் பாண்டியன்' படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார் கே.எஸ்.ரவிக்குமார். ஹீரோக்கான அத்தனை அம்சங்களும் பொருந்திய ஒரு நடிகராக இருந்தவரை இந்த சினிமா சிவப்பு கம்பளம் கொடுத்து வரவேற்றது. ஹீரோவாக அவர் நடித்த 'சூரியன்' படம் மிக பெரிய வெற்றி படமாக அமைந்தது.


தொடர்ச்சியாக 90களில் முன்னணி இயக்குநர்களாக இருந்த அனைவரின் படங்களிலும் நாயகனாக அலங்கரித்தார். சரத்குமார் திரைப்பயணத்தில் சூர்யவம்சம், நாட்டாமை, நட்புக்காக, ஜானகி ராமன், ஐயா, மாயி, அரசு, ஏய், சாணக்யா என அடுத்தது சூப்பர் ஹிட் பிளாக்பஸ்டர் படங்களால் கொண்டாப்பட்டார். எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை சிறப்பாக கையாளக்கூடிய திறமை வாய்ந்த ஒரு நடிகர் என்பதை நிரூபித்தார். அதற்கு உதாரணம் தான் 'பச்சைக்கிளி முத்துச்சரம்' படத்தில் நடித்த வீக்கான கதாபாத்திரம்.


 



ஒரு தயாரிப்பாளராகவும், நடிகராகவும் இருந்த சரத்குமார் இயக்குநர் அவதாரம் எடுத்தது அவரின் 100வது படமான 'தலைமகன்' திரைப்படம். திருநங்கையாக 'காஞ்சனா' படத்தில் அவரின் நடிப்பு அபாரம். நடுத்தர வயது என்றாலும் முதியவர் கதாபாத்திரங்களிலும் தயக்கமின்றி நடித்தவர். இப்படி படிப்படியாக தனது நட்சத்திர அந்தஸ்தை உயர்த்தி கொண்ட சரத்குமார் நடிகர் சங்க தலைவராகவும் பதவியேற்றார். அரசியலிலும் கால் தடம் பதித்த  சரத்குமார் திமுக கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். 30 ஆண்டு காலத்திற்கும் மேலாக அவரின் திரைப்பயணம் மட்டுமின்றி பல துறைகளிலும் அவர் நிகழ்த்திய சாதனை என்றுமே பாராட்டுக்குரியது.