செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு நகரில், மணிகூண்டு அருகே பூ வியாபாரம் செய்து வந்தவர் பாமக வடக்கு நகர செயலாளர் நாகராஜ். இவர் நேற்று  முன்தினம் இரவு 11:30 மணியளவில் மர்ம நபர்களால் வெட்டிப்பட்டதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த படுகொலை சம்பவம் குறித்து தகவல் தெரிந்த செங்கல்பட்டு நகர காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, சென்று உடலை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததனர். உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து , நள்ளிரவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

6 தனிப்படைகள் அமைத்து

 

இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர், உடனடியாக இச்சம்பவம் குறித்து 6 தனிப்படைகள் அமைத்து தேடுதல் வேட்டையின் போது, கொலை குற்றவாளிகள் பரனூர் வழியாக சென்றதாக, வந்த ரகசிய தகவலின் அடிப்படையில், காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது புலிபாக்கம் பகுதியில் ரயில்வேபாதை அருகே சந்தேக நபர் செல்வதாக, அறிந்து காவல்துறை அந்த நபரை கைது செய்ய முயன்ற போது காவல்துறையை தாக்க முயற்சித்த செங்கல்பட்டு, சின்னநத்தம் பகுதியை சேர்ந்த அஜய் என்கிற நபரை காவல் துறை துப்பாக்கியால், இடது கால் பகுதியில் சுட்டனர்.


இதனால் நிலை தடுமாறிய அஜயை காவல்துறையினர் கைது செய்து சிகிச்சைக்காக, காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவு சிகிச்சை அளிக்கப்பட்டு எக்ஸ்ரே எடுத்து பார்த்ததில், பலத்த காயமில்லை என காவல்துறை அறிந்து, அவரை உள் நோயாளியாக அனுமதித்து காவல்துறையின் பலத்த காவல் பாதுகாப்புடன் வைத்துள்ளனர். மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், டிஎஸ்பி ஜூலியஸ் சீசர் தலைமையில் ஆய்வாளர்கள் வெற்றிச்செல்வன் சத்தியவாணி ஆகியோர் தலைமையில் 15-க்கும் மேற்பட்ட காவலர்கள் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

 

சுட்டு பிடித்த சம்பவம்

 

இந்தநிலையில், இந்த கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட, செங்கல்பட்டு பகுதியை சேர்ந்த கார்த்தி என்பவரை கைது செய்த போலீசார் படாளம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவ இடத்தினை வடக்கு மண்டல காவல்துறை துணை தலைவர் பகலவன் மற்றும் செங்கல்பட்டு எஸ். பி. உள்ளிட்டோர், கொலை சம்பவ இடத்தை ஆய்வு மேற்கொண்டு , அது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தப்பி ஓடிய குற்றவாளி காவல்துறை சுட்டு பிடித்த சம்பவம் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 


இதைத்தொடர்ந்து உடற்கூராய்வு முடிந்த பின் உடலை வாங்க மறுத்து, பாட்டாளி மக்கள் கட்சியினர் மற்றும் நாகராஜன் உறவினர்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை அருகே , செங்கல்பட்டு ஜிஎஸ்டி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். 20 நிமிடத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த சாலை போராட்டத்தால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அங்கு பாதுகாப்பு இருந்த காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என உத்தரவாதம் அளித்ததை தொடர்ந்து, சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டு, அங்கிருந்து பாமகவினர் பேரணியாக, சென்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

 

அன்புமணி ராமதாஸ் போராட்டம் 

 

முன்னதாக நகர் பகுதியில் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 700-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நகரில் சில பகுதியில், கடைகளும் அடைக்கப்பட்டு பரபரப்புடன் காணப்பட்டது. இந்த நிலையில் 50 நாட்களில் செங்கல்பட்டு மாவட்டத்தில் 3 பாமக பிரமுகர்கள் கொலை செய்யப்பட்டதை கண்டித்து, இன்று செங்கல்பட்டு அம்பேத்கர் சிலை அருகே போராட்டம் நடைபெற உள்ளதாக, பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்பி அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்தநிலையில் காவல்துறையினர் சமாதானத்தை தொடர்ந்து, நாகராஜின் உடலை உறவினர்கள் பெற்றுக் கொண்டனர்.


இதுகுறித்து காவல்துறை தரப்பில் விசாரித்த பொழுது : நாகராஜன் பூக்கடையில் சூர்யா என்பவர் வேலை பார்த்து வந்தது தெரிய வந்துள்ளது. அப்பொழுது இருவருக்கிடையே ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக, சூர்யா தனது நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு நாகராஜன் கொலை செய்தது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக அஜய் மற்றும் கார்த்தி ஆகிய இருவரை கைது செய்து கொலைக்காரன காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், தப்பி ஓடிய நான்கு பேரை தனிப்படை அமைத்து தேடி வருவதாகவும் தெரிவித்தனர்.

 

தொடரும் கொலைகள்

 

மறைமலைநகர் பகுதியில் பா.ம.க. நிர்வாகி மனோகரன், வன்னியர் சங்க மாவட்டத் தலைவர் காட்டூர் காளிதாசன், செங்கல்பட்டில் பூக்கடை நாகராஜ் என கடந்த மே 22 ஆம் நாளில் இருந்து இப்போது வரையிலான 50 நாட்களில் பாமக நிர்வாகிகள் மூவர்  படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.  செங்கல்பட்டு நீதிமன்ற வளாகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் லோகேஷ் என்பவர் கொடூரமான முறையில் நாட்டு வெடிகுண்டு வீசி படுகொலை செய்யப்பட்டார். கடந்த 6 மாதங்களில் மட்டும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட படுகொலைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன, குறிப்பிடத்தக்கது. இதில் பல கொலைகளில் கூலிப்படையினர் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் இருந்து வண்ணம் உள்ளன