ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராக மொத்தம் 11 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதன் மீதான விசாரணை இன்று நடைபெற உள்ளது.


ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து விவகாரம்:


இந்த மனுக்களை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரிக்க உள்ளது. அமர்வில், நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், சஞ்சீவ் கண்ணா, பிஆர் கவாய் மற்றும் சூர்யா காந்த் ஆகியோர் இடம்பெற்றுள்ளளனர். ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கத்திற்கு ஆதரவாக பல்வேறு கருத்துகளை எடுத்துரைத்து மத்திய அரசு நேற்று பிரமாண பத்திரம் ஒன்றை தாக்கல் செய்தது.


அதில், "சட்டப்பிரிவு 370ஐ நீக்கி நடவடிக்கை எடுத்ததன் மூலம் ஜம்மு மற்றும் காஷ்மீர் மற்றும் லடாக்கில் முன்னேப்போதும் இல்லாத அளவுக்கு அமைதி நிலவி வருகிறது. ஜம்மு காஷ்மீர் கடந்த 30 ஆண்டுகளாக தீவிரவாதத்தின் தாக்கத்தை சந்தித்து வருகிறது. இதைத் தடுக்க, 370வது பிரிவை நீக்குவதுதான் ஒரே வழி.


இன்று, பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைத்தும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் இயல்பாக இயங்கி வருகின்றன. தொழில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. அச்சத்தில் வாழ்ந்த மக்கள் நிம்மதியாக வாழ்கின்றனர்" என குறிப்பிடப்பட்டுள்ளது.


கடந்த 2019ஆம் ஆண்டு, பாஜக இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்ததை தொடர்ந்து, ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது. இதை தொடர்ந்து, ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. சட்டப்பேரவையற்ற யூனியன் பிரதேசமாக லடாக் இருந்து வருகிறது. அது மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது.


ஜம்மு காஷ்மீருக்கு சட்டப்பேரவை இருந்துபோதிலும், அதற்கு இன்னும் தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. கடந்தாண்டு இறுதியிலேயே தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்னும் தேர்தல் நடத்தப்படாததால் இருப்பது பெரும் நிர்வாக சிக்கலை உருவாக்கியுள்ளது.


ஜம்மு காஷ்மீர் அரசியல்:


சிறப்பு அந்தஸ்தின் கீழ் ஜம்மு காஷ்மீருக்கு தனி அரசியலமைப்பு வைத்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி, பாதுகாப்பு, தகவல் தொடர்பு, வெளி விவகாரங்களை தவிர மற்ற எல்லா துறைகளிலும் முடிவுகளை எடுக்கும் அதிகாரம் ஜம்மு காஷ்மீர் அரசுக்கு வழங்கப்பட்டது.


கடந்த 1947ஆம் ஆண்டு, சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டதன் மூலமாக இந்தியாவுடன் ஜம்மு காஷ்மீர் இணைந்தது. ஜம்மு காஷ்மீர் அரசியலை பொறுத்தவரையில், தேசிய மாநாட்டு கட்சி, காங்கிரஸ், மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவைதான் ஆதிக்கம் செலுத்துகின்றன. 
 
ஜம்மு காஷ்மீர் அரசியல் வரலாற்றில் முக்கிய தருணம் என்றால் அது, கடந்த 2014ஆம் ஆண்டு, மக்கள் ஜனநாயக கட்சியுடன் பாஜக கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்த தருணத்தை சொல்லலாம். கடந்த 2018ஆம் ஆண்டு, கூட்டணியில் இருந்து பாஜக விலகியதை தொடர்ந்து அங்கு குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.


சிறப்பு அந்தஸ்து நீக்கத்திற்கு பிறகு, ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்ததாக தொடர் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. ஆனால், ஜம்மு காஷ்மீர், தற்போதுதான் இயல்பு நிலைக்கு வந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்து வருகிறது.