துர்நாற்றம் வீசிய வீடு
செங்கல்பட்டு (Chengalpattu): செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த ஆலத்தூர் கிராமத்தில் ராஜேஸ்வரி என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது. இந்த வீட்டில் ஐந்து போர்ஷன்கள் உள்ளன. ஆலத்தூர் சிட்கோ தொழிற்பேட்டையில் வேலை செய்யும் தொழிலாளர்களே பெரும்பாலும் இந்த வீட்டில் வசித்து வருகின்றனர். இந்த வீட்டின் ஒரு போர்ஷனில் கடந்த 4 ஆண்டுகளாக சுமார் 65 வயது மதிக்கத்தக்க ஆணும், சுமார் 54 வயது மதிக்கத்தக்க பெண்ணும் வாடகைக்கு வசித்து வந்தனர். இந்நிலையில், வாடகை தொகை கொடுக்காததால், அதை கேட்பதற்காக ராஜேஸ்வரி நேற்று முன்தினம் காலை 10 மணியளவில் அந்த வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீடு பூட்டப்பட்டு இருந்தது. அதே நேரத்தில் வீட்டில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியது. அக்கம் பக்கத்தில் விசாரித்த பொழுது, வீடு இரண்டு நாட்கள் மேலாக பூட்டி இருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து வீட்டு உரிமையாளர் ராஜேஸ்வரி சந்தேகம் அடைந்துள்ளார்.
உடலை மீட்ட போலீஸ்
இதையடுத்து திருப்போரூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மாமல்லபுரம் போலீஸ் டி.எஸ்.பி. ஜெகதீஸ்வரன், திருப்போரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் அங்கு வந்து வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது பிளாஸ்டிக் டிரம் ஒன்றில் பிளாஸ்டிக் கவர் ஒன்றில் இருந்து துர்நாற்றம் வீசியது தெரிய வந்தது. இதையடுத்து பிளாஸ்டிக் டிரம்மை வெளியே கொண்டு வந்து பார்த்தபோது மிக மோசமாக அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடந்தது. இதுகுறித்து அக்கம் பக்கத்தில் விசாரித்ததில் அது அந்த வீட்டில் வசித்து வந்த ஆண் என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அந்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
எழிலரசி மீது சந்தேகம்
ஆலத்தூர் கிராம நிர்வாக அலுவலர் தரணி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் இறந்து கிடந்த நபரின் பெயரில் வளத்தி கோவிலான் (76) என்பதும் அவருடன் எழிலரசி (54) என்பவர் வாழ்ந்து வந்தார். இருவரும் விழுப்புரம் மாவட்டத்தினைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்தது. வளத்தி கோவிலானை கொலை செய்தது யார், எழிலரசி எங்கே என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். வளத்தி கோவலனின் மனைவி கடந்த 9 வருடங்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் எழிலரசி என்ற பெண்ணுடன் வசித்து வருவது விசாரணையில் தெரியவந்தது.
"ரத்த வாந்தி எடுத்து "
இந்த நிலையில் திடீரென மாயமான எழிலரசி மீது காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. மனைவி எழிலரசியில், செல்போன் சிக்னலை வைத்து போலீசார் விசாரித்ததில், அப்பெண்ணுக்கு சென்னையை சேர்ந்த ஒருவருடன் தொடர்பு இருந்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, நேற்றிரவு அந்த செல்போன் சிக்னலை வைத்து வளத்திகோவிலானுடன், இருந்த பெண் எழிலரசியை திருப்போரூர் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் போலீசார் மடக்கி பிடித்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் தான் கொலை செய்யவில்லை எனவும் திடீரென அவர் ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்து விட்டார். என்ன செய்வது என்று தெரியாமல் அவரை டிம்மில் வைத்து மூடிவிட்டு அங்கிருந்து சென்று விட்டேன் என தெரிவித்தார். இதனால் குழப்பம் அடைந்த போலீசார் உடற்கூர் ஆய்வு முடிவுக்காக காத்திருக்கின்றனர். எழிலரசிக்கு வேறு யாருடனாவது தொடர்பு உள்ளதா, அவர் ஒருவரே இச்செயலை செய்திருக்க முடியுமா என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். மேலும், இவ்வழக்கு தொடர்பாக ஆலத்தூர் அருகே கருங்குழிப்பள்ளம் பகுதியில் ஒரு தனியார் தோட்ட காவலாளியை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.