மாமல்லபுரத்தில் மர்ம பொருள் வெடித்து பழைய காவலர் குடியிருப்பு இடிந்து விழுந்த இடத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை போட்டதில் பந்து வடிவில் கைப்பற்றப்பட்ட பொருள் நாட்டு வெடிகுண்டா? என தடய வியல் ஆய்வுக்கு போலீசார் அதனை அனுப்பி வைத்தனர்.

  


பயங்கர ஓசையுடன் வெடித்த மர்ம பொருள் 


செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் மகளிர் காவல் நிலையம் அருகில் யாரும் வசிக்காத பாழடைந்த காவலர் குடியிருப்பு கட்டிடத்தில் நேற்று முன்தினம் மாமல்லபுரம் நகரம் முழுவதும் பயங்கர ஓசையுடன் மர்ம பொருள் ஒன்று வெடித்து தீப்பிடித்ததில் அந்த பாழடைந்த கட்டிடத்தின் சுவர்கள் இடிந்து கட்டிடம் முழுவதும் சேதமடைந்தது. மர்ம பொருள் வெடித்த அதிர்வில் அருகில் உள்ள 14 புதிய காவலர் குடியிருப்புகளின் ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கி தூள், தூளாக கீழே சிதறி கிடந்ததை காண முடிந்தது.




சேதமடைந்த பொருட்கள்


ஒரு மோட்டார் சைக்கிள் சேதமடைந்தது. இந்நிலையில் மர்ம பொருள் வெடித்த பாழடைந்த கட்டிடத்தில் நேற்று மாமல்லபுரம் மகளீர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வி, மாமல்லபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலையில் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் தடய அறிவியல் துறை அதிகாரிகள் வெடிகுண்டு சோதனை கருவிகள் மூலம் ஆய்வு செய்தனர். அப்போது மர்ம பொருள் வெடித்த இடத்தில் இருந்து பந்துபோன்ற வடிவிலான ஒரு பொருளை கைப்பற்றினர்.




தடய அறிவியல் துறையினர் சோதனை 


மேலும் தடய அறிவியல் துறையினர் எரிந்த காகிதங்கள், கட்டைகள் அகியவற்றையும் சேகரித்தனர். மேலும் கைப்பற்றப்பட்ட பந்து போன்ற வடிவிலான பொருள் அதிவேக நாட்டு வெடிகுண்டாக இருக்கலாம் என்றும் சந்தேகப்படுகின்றனர். தடவியல் பரிசோதனை முடிவில் அவை நாட்டு வெடிகுண்டா அல்லது வேறு ஏதாவது ஒரு வெடி பொருளாக என தெரிய வரும் என்று தடயவியல் அதிகாரிகள் தெரிவித்தனர்.


அங்குலம், அங்குலமாக சோதனை


மர்ம பொருள் வெடித்த இடத்தில் வெடிக்காத நிலையில் வேறு ஏதாவது வெடி பொருட்கள் உள்ளதா? என ஜே.சி.பி. எந்திரம் வரவழைக்கப்பட்டு, மிகுந்த கவனத்துடன் அங்கு யாரையும் அனுமதிக்காமல் அந்த பாழடைந்த கட்டிடத்தின் இடிபாடுகளை அகற்றி போலீசார் அங்குலம், அங்குலமாக சோதனை போட்டனர். ஆனால் எந்தவிதமான வெடி பொருட்களும் சிக்கவில்லை. மேலும் அந்த கட்டிடத்தில் உள்ள பழைய இரு சக்கர வாகனங்களை போலீசார் அகற்றினர். 




அச்சத்தில் இருந்த பொதுமக்கள்


முன்னதாக அந்த பாழடைந்த கட்டிடத்தில் மின் ஊழியர்களை வரவழைத்து மின் இணைப்புகள் போலீசார் துண்டித்தனர். இதற்கிடையில் மர்ம பொருள் வெடித்த கட்டிடத்தின் எதிரில் வசித்து வரும் புதிய போலீஸ் குடியிருப்பில் வசித்து வரும் பெண்கள் ஒருவித நடுக்கம், கலந்த பயத்துடன் காணப்பட்டனர். வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை போட்டபோது, ஏற்கனவே ஜன்னல் கண்ணாடிகள் உடைந்த நிலையில், மேலும் தங்கள் வீடுகளுக்கு சேதம் ஏற்படாத வகையில் அக்காவலர் குடியிருப்பு வாசிகள் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தங்கள் வீடுகளின் கதவுகளை சாத்தி கொண்டு யாரும் வெளியில் வராமல் உள்ளேயே பாதுகாப்பாக இருந்ததை காண முடிந்தது.




காவல்துறை சொல்வது என்ன ?


இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், இரண்டு அரை கோள வடிவிலான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு பொருட்களையும் இணைத்து பார்க்கும் போது பந்து வடிவில் வருகின்றது. ஒருவேளை இந்த மர்ம பொருள் வெடித்து சிதறி இருக்கலாம் என்ற சந்தேகம் இருந்தது. தடய அறிவியல் துறையினர் சோதனைக்காக மேலும் சில பொருட்களை கொண்டு சென்றுள்ளனர். முழுமையான ஆய்வுக்குப் பிறகு வெடித்தது எந்த பொருள் என்பது குறித்த தகவல்கள் வெளிவரும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.