Vikas Yadav: இந்திய ”ரா” அமைப்பின் முன்னாள் அதிகாரியான விகாஷ் யாதவ், கொலை முயற்சி வழக்கில் அமெரிக்காவின் எஃபிஐ அமைப்பால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
விகாஷ் யாதவ் கைது?
அமெரிக்காவில் காலிஸ்தான் அமைப்பின் தலைவரான குர்பத்வந்த் சிங் பன்னுனை, கொலை செய்ய முயற்சித்ததாக, இந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவு எனப்படும் “ரா” அமைப்பின் முன்னாள் அதிகாரியான விகாஷ் யாதவ் மீது குற்றச்சாட்டு நிலவுகிறது. இதுதொடர்பாக, அவரை தேடப்படும் குற்றவாளியாக அமெரிக்காவின் FBI விசாரணை அமைப்பு அறிவித்துள்ளது. மேலும், இவ்வழக்கு தொடர்பாக அமெரிக்க நீதித்துறை (DoJ) குற்றப்பத்திரிகையில் புகைப்படத்துடன் தேடப்படும் குற்றவாளியாக விகாஸ் யாதவை அறிவித்து, அவர் மீது கூலிக்கு கொலை செய்தல், பணமோசடி உள்ளிட்ட குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே கனடா உடனான மோதல் போக்கு, மேற்கத்திய நாடுகள் உடனான இந்தியாவின் உறவை சிக்கலாக்கியுள்ளது. இந்நிலையில், அமெரிக்காவின் இந்த குற்றச்சாட்டு மேலும் பரபரப்பை கிளப்பியுள்ளது. அப்பட் இருக்கையில், விகாஸ் யாதவ் டெல்லியில் சிறப்பு தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியானதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜாமினில் வெளியானாரா விகாஷ் யாதவ்?
குர்பத்வந்த் சிங் பன்னுனை கொலை செய்ய முயன்றதாக, கடந்த ஆண்டு அமெரிக்க நீதித்துறை குற்றச்சாட்டுகளை வெளியிட்டு இருந்தது. ஆனால், அதில் விகாஷ் யாதவின் விவரங்கள் வெளியிடப்படாமல், அவர் “CC-1” என அடையாளப்படுத்தப்பட்டு இருந்தார். இந்த தகவல் வெளியான மூன்று வாரங்களிலேயே, மிரட்டி பணம் பறித்த குற்றச்சாட்டில் டெல்லியில் விகாஷ் யாதவ் கைது செய்யப்பட்டதாகவும், அதைதொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் திகார் சிறையில் இருந்து ஜாமினில் விடுவிக்கப்பட்டதாகவும், தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த வெள்ளியன்று விகாஷ் யாதவை தேடப்படும் குற்றவாளியாக எஃபிஐ அறிவித்த நிலையில், தற்போது இந்த தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய அரசு சொல்வது என்ன?
வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளரின் செய்தியாளர் சந்திப்பின்போது, அமெரிக்க நீதித்துறையின் குற்றச்சாட்டில் இந்திய அரசு ஊழியர் என குறிப்பிடப்பட்டு இருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ”விகாஷ் யாதவ் இந்திய அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இல்லை" என்று விளக்கமளித்துள்ளார்.
கடந்த ஆண்டு குற்றச்சாட்டுகள் வெளியானதுமே டெல்லியில் அவர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்நிலையில் தான், வெள்ளிக்கிழமை FBI இன் நியூயார்க் அலுவலகம் அவரை தேடப்படும் பட்டியலில் சேர்த்தது மற்றும் அவரைப் பற்றிய தகவல்களையும் இந்திய அரசிடம் கேட்டுள்ளது.
யார் இந்த விகாஷ் யாதவ்?
ஹரியானாவைச் சேர்ந்த விகாஷ் யாதவ், பாதுகாப்பு மற்றும் உளவுத்துறைப் பொறுப்புகளைக் கையாள்வதில், ராவில் மூத்த அதிகாரியாகப் பணியாற்றினார். RAW இல் பணிபுரிவதற்கு முன்பு, அவர் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (CRPF) உறுப்பினராக இருந்தார். போர்க்கப்பல் மற்றும் ஆயுதங்களில் சிறப்புப் பயிற்சி பெற்றார். யாதவ் இந்தியாவிலிருந்து ரிமோட் மூலம், குர்பத்வந்த் சிங் பன்னுவை கொலை செய்வற்கான சதித்திட்டத்தை இயக்கியதாக அமெரிக்க அதிகாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.