காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த தாங்கி கிராமத்தை சேர்ந்தவர் கன்னியப்பன். இவரது மகள் சாந்தி (49) திருமணமாகாதவர். இவர் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களின் ஆடு, மாடுகளை வாடகை முறையில், அதே பகுதியில் மேய்ப்பது வழக்கம். இந்நிலையில் கடந்த 2020 - ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆடு மேய்க்கச் சென்ற சாந்தி மாலை வரை வீடு திரும்பவில்லை என வாலாஜாபாத் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
உடலை மீட்ட போலீசார்
இதுகுறித்து, வாலாஜாபாத் காவல் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதனை அடுத்து அதே பகுதியில் முட்புதரில் பெண்சடலம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடலை மீட்ட வாலாஜாபாத் போலீசார், வழக்குப்பதிந்து விசாரித்ததில் இறந்தவர் இப்பகுதியில் ஆடு, மாடு மேய்க்கும் சாந்தி என தெரியவந்தது. இதனிடையே சாந்தி காணாமல் போன அன்று தாங்கி கிராமத்தில் ரைஸ் மில்லில் வேலை செய்யும், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இந்திரஜித் முக்கியா (25) மதுபோதையில் நடந்து சென்ற சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதை பார்த்து அப்பகுதியினர் வாலாஜாபாத் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
சாந்தியை கொலை செய்ததை ஒப்புக்கொண்ட இளைஞர்
வட மாநில இளைஞருக்கும் சாந்தி மரணத்திற்கு, ஏதேனும் தொடர்பு உள்ளதா என பல்வேறு கோணங்களில் போலீசார் அவனிடம் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது ஆடு மேய்த்த சாந்தியை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்ததை அவன் ஒப்புக் கொண்டான். இதனை அடுத்து வாலாஜாபாத் போலீசார் இந்திரஜித் முக்கியாவை கைது செய்து, வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு
இது தொடர்பான வழக்கு செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த மகிளா நீதிமன்ற நீதிபதி இளவரசி, குற்றம் சாட்டப்பட்ட இந்திரஜிதுக்கு ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டார். மேலும் 31 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் கட்ட தவறினால், 6 மாத சிறை தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.