மதுராந்தகம் ( madurantakam accident today ) அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து மீது லாரி உரசி, படிகட்டில் பயணம் செய்த 4 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு
படிக்கட்டு பயணம்
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பேருந்துகளில் படிக்கட்டில் பயணம் செய்து வருவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பல ஆண்டுகளாகவே இந்த புகார் இருந்து வந்தாலும், சமீப காலமாக இது குறித்து வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியும் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இதுகுறித்து ஆபத்தை உணராமல் படிகளில் பயணம் செய்து வருவதால் பல சமயங்களில் அசம்பாவிதமும் ஏற்பட்டு வருகிறது. அரசு பேருந்துகளில் மட்டுமில்லாமல் தனியார் பேருந்துகளில், இதுகுறித்த குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருகின்றன. தனியார் பேருந்துகள் வழக்கத்தை விட மிக வேகமாக செல்வதும், அதிக கூட்டத்தை ஏற்றுவதற்காக தனியார் பேருந்துகளில் மாணவர்களை படிக்கட்டில் நிற்க வைத்து செல்வதும் தொடர்கதை ஆகி வருகிறது.
அதிக அளவு பயணம் செய்யும் மக்கள்
சென்னையின் புறநகர் பகுதியாக உள்ள செங்கல்பட்டு நோக்கி பல்வேறு கிராமங்களில் இருந்து மாணவ மாணவிகள் பேருந்துகளில் வந்து படித்து சொல்வது வழக்கம். அந்த வகையில் சூனாம்பேடு பகுதியில் இருந்து செங்கல்பட்டுக்கு தனியார் பேருந்து இயங்கி வருகிறது. காலை வேளையில் இயங்கக்கூடிய இந்த பேருந்தில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி படிக்கும் மாணவ மாணவிகள் சென்று வருகின்றனர். தனியார் பேருந்து என்பதால் எப்பொழுதும் அதிகளவு பயணிகளை ஏற்றி செல்வதும் வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது.
திடீர் பிரேக்
வழக்கம்போல் இந்த தனியார் பேருந்தில் , இன்று செங்கல்பட்டு நோக்கி மதுராந்தகம் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுநாகலூர் பகுதியில் அதிவேகமாக சென்று கொண்டிருந்தது. அப்பொழுது படிக்கட்டில் மாணவர்கள் சிலர் தொங்கி கொண்டு வந்துள்ளனர் . தேசிய நெடுஞ்சாலையில் பேருந்துக்கு இடது புறம் சென்று கொண்டிருந்த கண்டைனர் லாரியை, அதிவேகமாக சென்று வலது புறத்திலிருந்து முந்த முயற்சி செய்து, சிறுநாகலூர் பேருந்து நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்த ஓட்டுனர் முயற்சி செய்துள்ளார். அப்பொழுது எதிர்பாராத விதமாக போடப்பட்ட திடீர் பிரேக் காரணமாக, படிக்கட்டில் தொங்கி இருந்த மாணவர்கள் தங்களது பிடியை பிடிக்க முடியாமல் கீழே விழுந்துள்ளனர். அவர்கள் மீது பின்னால் வந்த கன்டெய்னர் லாரி ஏறியதில் சம்பவ இடத்திலேயே தனியார் கல்லூரியை சேர்ந்த 3 மாணவர்கள் துடி துடித்து உயிரிழந்தனர்.
கதறி அழுத உறவினர்கள்
இது குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பிரேதங்களை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சம்பவத்தில் பலத்த காயம் அடைந்த தினேஷ் மற்றும் மற்றொரு மாணவன் ஆகியோரை மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதித்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், ராமாபுரம் பகுதியை சேர்ந்த கமலேஷ் (20) தனுஷ் (19) மோனிஷ் (20) ஆகிய மூன்று பேர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தினேஷ் என்ற மாணவனின் உயிரிழந்ததை தொடர்ந்து இந்த கொடூர விபத்தில் பலி எண்ணிக்கை நான்காக உயர்ந்தது. உயிரிழந்த மாணவர்களின் உடலை பார்த்து, சக பயணிகள் மற்றும் உறவினர்கள் கதறி அழுத சம்பவம் அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.