பெண்களை சுதந்திரமாக மாற்றினால் கண்ணியத்துடன் வசதியாக குடும்பம் நடத்தும் அளவுக்கு சேமிப்பார்கள் என நடிகையும் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பூ தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பூ தலைமை வகித்தார். இதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், “இன்னைக்கு தாய்மார்களுக்கு ரூ.1000 கொடுத்தாலோ, பிச்சை போட்டால் அவர்கள் வாக்கு அளித்து விடுவார்களா?” என கேள்வி எழுப்பியிருந்தார். குஷ்பூவின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. பலரும் சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் தன்னுடைய பேச்சு சர்ச்சையான நிலையில் குஷ்பூ விளக்கம் கொடுத்துள்ளார். அதில், “அறிவாலயம் தரகர்களுக்கு செய்திகளில் தங்கள் பெயர் வலம் வர உங்களுக்கு குஷ்பூ தேவை. மற்றபடி நீங்கள் தகுதியற்றவர் என்பதால் யாரும் கண்டுகொள்ளக்கூட மாட்டார்கள். 1982 ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஏழைகளுக்கு வழங்கிய இலவச உணவை 'பிச்சை' என்று முரசொலிமாறன் கூறியபோது, இந்த சுயநல பாதுகாப்பற்ற குலத்தைச் சேர்ந்த யாரும் குதித்து அதைக் கண்டிக்கவில்லை. ஓசியில் கொடுப்பதால்தான் பெண்கள் பேருந்துகளில் பயணம் செய்கிறார்கள் என்று பொன்முடி சொன்ன போதும், உயர்நீதிமன்ற மதுரை கிளையை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கலைஞர் கருணாநிதி பிச்சையாக போட்டதாக வேலு சொன்னபோதும் நீங்கள் அனைவரும் குருடர்களாகவும், ஊமைகளாகவும், காதுகேளாதவர்களாகவும் இருந்தீர்களா??
போதைப்பொருளை நிறுத்துங்கள். டாஸ்மாக்கில் இருந்து வரும் உங்கள் கமிஷனை குறையுங்கள். டாஸ்மாக்கில் உழைக்கும் மக்கள் செலவழிக்கும் பணத்தை சேமிக்க நமது பெண்களுக்கு உதவுங்கள். உங்கள் பணத்தை விட குடிகாரர்களால் அவர்கள் படும் வேதனையின் அளவு அதிகம். அவர்களை சுதந்திரமாக ஆக்குங்கள். அவர்களுக்கு உங்கள் 1000/- ரூபாய் தேவையில்லை. பெண்களை சுதந்திரமாக மாற்றினால் அவர்கள் கண்ணியத்துடன் வசதியாக குடும்பம் நடத்தும் அளவுக்கு சேமிப்பார்கள். ஆனால் உங்கள் அடுத்த 14 தலைமுறையினரின் எதிர்காலத்தைப் பாதுகாக்க இந்த உலகத்தில் உள்ள மற்றவர்களை விட திமுகவுக்குப் பணம் தேவை என்று நினைக்கிறேன். எனவே உங்கள் பொய்ப் பிரச்சாரத்தை தொடருங்கள். ஏனென்றால் நீங்கள் தமிழ்நாட்டில் எப்படி தோல்வியடைந்தீர்கள் என்பதை நிரூபிக்க ஒரே வழி இதுதான்” என குஷ்பூ எக்ஸ் வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.