செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ( Artificial Intelligence ) மூலம் உண்மையான குரலில் போலியாக பேசி பணம் பறிக்கும் மோசடி நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து, ட்விட்டரில் பயனர் தெரிவித்ததையடுத்து வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு :
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை, அறிவுப்பூர்வமாக பல நன்மைகளை கிடைக்கின்ற போதிலும், சிலர் தவறாகவும் பயன்படுத்துவது நிகழத்தான் செய்கிறது. ஏஐ மூலம் சிலர் புகைப்படங்களை தவறுதலாக சித்தரிப்பதும், வீடியோ காலில் போலியான நபரை உருவாக்கி ஏமாற்றுவதும் கவலையை ஏற்படுத்தும் நிகழ்வாக உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு, ஏஐ தொழில்நுட்பத்தை வைத்து பிரபல நடிகையை தவறுதலாக சித்தரித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், புதுவிதமாக போலி ஆடியோவை வைத்து, உண்மை போல சித்தரித்து ஏமாற்றும் செயலில் இறங்கியிருப்பது அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
போலி ஆடியோ:
இதுகுறித்து பாதிக்கப்பட்ட ஒரு நபர் ட்விட்டரில் பதிவை ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் ஒரு நபர், தொலைபேசி மூலம் அழைத்திருக்கிறார். காவல்துறை அதிகாரி பேசுகிறேன், உங்கள் மகளை கைது செய்துள்ளோம். உங்கள் மகள்தான், உங்களது தொலைபேசி எண்ணை எங்களுக்கு கொடுத்தார். ஏன், எனது மகளை கைது செய்தீர்கள் என்று அந்த பெண் கேட்க, உங்கள் மகளுடன் 4 பெண்களை கைது செய்துள்ளோம்; இந்த 4 பெண்கள், எம்.எல்.ஏ மகனை மிரட்டி உள்ளனர் என்று தெரிவித்திருக்கிறார்.
இதையடுத்து, இழப்பீடு வழங்கினால், பிரச்னையை தீர்க்கலாம் என்றும் கூறியிருக்கிறார். சந்தேகமடைந்த பெண், அழைப்பை தொலைபேசியில் பதிவு செய்ய ஆரம்பித்திருக்கிறார். மேலும், எனது மகளை பேச வையுங்கள் என்று தெரிவித்திருக்கிறார்.
அதன்பின்தான், அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. அவரது மகள் உண்மையில் பேசுவது போன்ற குரல் ஆடியோவை ஒலிக்க செய்திருக்கிறார் காவல்துறை அதிகாரி போன்ற நடிக்கும் நபர். இதனால் சற்று அதிர்ச்சி அடைந்த பெண், தனது மகள் இந்த விதத்தில் பேச மாட்டார் சற்று சுதாரித்துக் கொண்டார்.
தனது மகளை சரியாக பேச சொல்லவும் என கூற எரிச்சலடைந்த நபர், உன் மகளை கூட்டி சென்று விடுவேன் என தெரிவித்து, முன்னுக்கு பின்னாக பதிலளிப்பதை பார்த்து போலியான நபர் என உறுதி செய்தார் அந்த பெண். மேலும் சிரித்து கொண்டே, எனது மகளை கூட்டி செல் என சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்து விட்டார்.
எச்சரிக்கை:
இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டு, அந்த தொலைபேசி எண்ணையும் பதிவிட்டிருந்தார். இதற்கு பலரும், இதுபோன்று தமக்கும் போலி அழைப்பு வந்ததாகவும் தெரிவித்தனர்.
அந்த எண்ணை ஏபிபி செய்தி நிறுவனம் ட்ருக்காலர் செயலியில் சோதித்ததில் ஸ்பாம் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதிலிருந்து, ஏற்கனவே சிலர் இந்த எண்ணை ஸ்பான் செய்திருக்கின்றனர் என்று தெரிகிறது.
எனவே இதுபோன்ற அழைப்பு வந்தால், மக்கள் எச்சரிக்கையாக இருக்கவும். மேலும் காவல்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கவும். தொழில்நுட்பத்தால் பல நன்மைகள் கிடைக்கின்ற போதும், இதுபோன்ற தீய செயல்கள நடப்பதை பார்க்கும்போது அச்சத்தையும் கவலையையும் உண்டாக்குகிறது.