செங்கல்பட்டு பகுதியில் இயங்கி வரும் அரசு சட்டக்கல்லூரியில் வெளிமாவட்டங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.இந்நிலையில் 2-ம் ஆண்டு பயின்றுவரும் தஞ்சாவூர் மாவட்டம் திருவாதூர் கிராமத்தை சேர்ந்த சிவபிரகாசம் என்பரவது மகள் கவிப்பிரியா வயது(19) என்பவர் செங்கல்பட்டு சட்டக்கல்லூரி விடுதியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
மேலும் அவர் கல்லூரி விடுதியில் தங்கியுள்ளார். இந்நிலையில் கடந்த 26-ஆம் தேதி தனது விடுதி அறையில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
கவிப்பிரியாவை நீண்டநேரமாக காணவில்லை என்பதால் அவரது அறைக்கு சென்று சக மாணவிகள் பார்த்தபோது அறையின் உள்ளே தூக்கிட்டு தொங்கியபடி இருந்துள்ளார். இதைதொடர்ந்து சக மாணவிகள் அவரை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், மாணவி கவிப்பிரியா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தற்கொலை செய்து கொள்வதற்கு சில நாட்களுக்கு முன்பு மிகுந்த மன உளைச்சலை ஏற்பட்டதாகவும் விடுதியை காலி செய்துவிட்டு சொந்த ஊருக்கே வந்து விடுவதாகவும் தன் தந்தை சிவப்பிரகாசர் இடம் தொலைபேசி வாயிலாக கவிப்பிரியா பேசியிருப்பது தற்போது விசாரணையில் தெரியவந்து உள்ளது. இருப்பினும் ஒரு சில நாட்களில் தேர்வு நடைபெற இருப்பதனால் தேர்வு முடியும் வரை பொறுத்து இருக்கும்படி, இவரது நண்பர்கள் தரப்பிலும் பெற்றோர் தரப்பிலும் கூறப்பட்டுள்ளது.
இதனால் மீண்டும் விடுதியில் இருக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார். இந்நிலையில்தான் கவிப்பிரியா விடுதியிலிருந்து பயந்து நான் சொந்த ஊருக்கு செல்ல இருக்கிறார் என்பது குறித்த தகவல் சக மாணவிகளுக்கு கிடைக்கப் பெற்றதன் காரணமாக மீண்டும் அதே அளவு அவரை சக மாணவிகள் தொடர்ச்சியாக ராகிங் செய்ததாக பெற்றோர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மன உளைச்சலில் இருந்த கவிப்பிரியா இதனால் மிகுந்த மன வேதனை அடைந்து கவிப்பிரியா தற்போது உயிரிழந்துள்ளார்.
இதுதொடர்பாக மாணவியின் பெற்றோர் சிவப்பிரகாசத்தை தொடர்புகொண்டு கேட்கும்பொழுது;
எனது மகள் தற்கொலைக்கு உரிய நீதி கிடைக்கும் வரை எனது மகளின் சடலத்தை நாங்கள் பெற்றுக்கொள்ள மாட்டோம். என் மகள் தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு கோழையல்ல. எங்களுக்கு எல்லாம் அவ்வளவு தைரியமாக ஆறுதல் சொல்வாள் என கண்கலங்கினார்.
சட்டக்கல்லூரி மாணவி ராகிங் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுகுணா சிங் கூறியதாவது?
மாவட்ட ஆட்சியர் மூலமாக கல்வித்துறை சார்ந்த ஒரு குழு அமைத்து மாணவி ராகிங் செய்ததன் காரணமாக தான் தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து விசாரிக்க தனி குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பெற்றோர் தரப்பில் இருந்து 2 புகார்கள் கொடுத்திருக்கிறார்கள். அதில் முதல் புகாரில் மாணவி ஏதேனும் பாலியல் தொந்தரவினால் பாதிக்கப்பட்டு இருக்கிறாரா? என்றும், மற்றொரு புகாரில் மாணவி தற்கொலைக்கு ராகிங்தான் காரணமா? என்பது குறித்து விசாரிக்க வேண்டும் என புகார் அளித்திருக்கிறார்கள்.
இந்த இரண்டு புகார்களை பெற்றுக்கொண்டு முறைப்படி விசாரணை மேற்கொண்டு வருகிறோம். முதற்கட்டமாக மாணவியின் பிரேத பரிசோதனையில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு குறித்து எந்தவிதமான அடையாளமும் இல்லை. மேலும் 100% தற்கொலைதான் செய்து கொண்டார் என்பது நிரூபணமாகியுள்ளது. எனவே இறப்பில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. இரண்டாவதாக ராகிங் புகார் குறித்து காவலர்கள் விசாரிப்பதை விட கல்வியாளர்கள் தலைமையில் ஏற்படுத்தப்படும் குழுவினர் விசாரிப்பதே மிகச்சிறப்பாக இருக்கும். அதை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின் பெயரில் தனி குழு ஒன்று அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் என்றார்.
இது தொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் தொடர்புகொண்டு கேட்டபோது..,
சட்டக்கல்லூரி மாணவிகள் பிரியா ராகிங் காரணமாக தற்கொலை செய்து கொண்டார் என்கின்ற அவரது தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் இது குறித்து விசாரிக்க சிறப்பு கல்வி குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது அக்குழுவில் சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி, புதுப்பாக்கம், அதன் முதல்வர் பேரா. (முனைவர்) கௌரி ரமேஷ் அவர்கள் விசாரணை அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து உடன் விசாரணை மேற்கொண்டு அறிக்கையினை சமர்ப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளது. மேலும், காவல் துறையினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல் துறைக்கும் கல்லூரி சார்பாக முழு ஒத்துழைப்பு தரப்படும் என தெரிவித்தார்.
முன்னதாக பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், ராகிங் கொடுமையால் கவிப்பிரியா தற்கொலை செய்து கொண்டது குறித்து முறையான விசாரணை நடத்த மறுக்கும் காவல்துறை, அவரது உடலை தகனம் செய்ய வைப்பதிலேயே தீவிரம் காட்டி வருகிறது. இதை தமிழக அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது. இந்த விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலையிட்டு, கவிப்பிரியாவின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தார்.