மாமல்லபுரம் அருகே தமிழ்நாடு சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்யநாதன் கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற புதுமண தம்பதியினர் தூக்கி வீசப்பட்டு கணவன் உயிரிழந்த நிலையில்  மனைவி பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



 

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த குன்னத்தூர் கிழக்கு கடற்கரை சாலையில் சென்னையிலிருந்து, மயிலாடுதுறை நோக்கி சென்ற தமிழக காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்ய நாதனின் கார் முன் சென்ற வாகனத்தை அதி வேகத்தில் முந்தி செல்ல முயலும் போது, எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது மோதி இரு சக்கர வாகனத்தில்,  பாண்டிச்சேரி அடுத்த கடலூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற புதுமண தம்பதியினர் தூக்கி வீசப்பட்டு கணவன் ஜான்சன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மனைவி ரூத் பொன் செல்வி பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



 

இரண்டு நாட்களுக்கு முன்பு மயிலாடுதுறை சென்ற அமைச்சர் மெய்யநாதனை அழைத்து வர கார் சென்றதாகவும், கடலூரில் உள்ள தனது வீட்டிலிருந்து சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு தனது மனைவியுடன் ஜான்சன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது இந்தக் கோர விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. சம்பவ இடத்திற்கு வந்த மாமல்லபுரம் போலீசார் ஜான்சனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் பின்னர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.