செங்கல்பட்டு ( Chengalpattu News ) : செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே சிறுதாவூர் பகுதியை சேர்ந்த 6 ஆம் வகுப்பு மாணவன் திருப்போரூர் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் பயின்று வருகிறார்.  6-ஆம் வகுப்பு மாணவனுக்கு செல்போன் மீது ஆசை ஏற்பட்டுள்ளது. இதனால் உடன் பயிலும் நண்பனிடம் செல்போன் வாங்குவது எப்படி என்று யோசனை கேட்டுள்ளார்.  அதற்கு திருப்போரூர்  கிரிவலைப் பாதை பகுதியை சேர்ந்த நண்பனின் சகோதரர் அதே பள்ளியில் 10-ஆம் வகுப்பு பயின்று வருகிறார். அவனிடம் கூறியபோது, ”உங்கள் வீட்டில் இருந்து பணம் கொண்டுவா.. செல்போன் வாங்கி தருகிறேன்” என்று கூறியுள்ளார்.

 


அடகு கடை


 

சிறுதாவூர் பகுதியை சேர்ந்த 6-ஆம் வகுப்பு மாணவன் தனது வீட்டிலிருந்தும்,  கடை வியாபாரத்திலிருந்தும் சிறுக சிறுக என 10 ஆயிரம் பணம் திருடிவந்து, 10 -ஆம் வகுப்பு மாணவனிடம் கொடுத்து  10 ஆயிரம் மதிப்பில் புதிய செல்போன் ஒன்று வாங்கி கொடுங்கள் அண்ணா என்று கேட்டுள்ளார். எனினும் 10-ஆம் வகுப்பு மாணவன், 6-ஆம் வகுப்பு மாணவன் தன்  வீட்டிலிருந்து பணம் திருடிவந்து கொடுத்ததை அறிந்து, வீட்டில் சொல்லிவிடுவேன் என மிரட்டியுள்ளார். இதனை பயன்படுத்தி அவ்வப்போது 10-ஆம் வகுப்பு சிறுவன்  6 -ஆம் வகுப்பு சிறுவனிடம்  தன் தேவைக்கேற்ப வீட்டில் உள்ள நகை, பணம் கொண்டு வரச்சொல்லி மிரட்டல் விடுத்து ஏமாற்றியுள்ளார். அப்படி பணம் நகை கொண்டு வந்து கொடுக்கவில்லை என்றால், ”நீ உங்கள் வீட்டில் திருடிய பணத்தில், செல்போன் வாங்கியதை சொல்லிவிடுவேன்” என்று மிரட்டியுள்ளார். தொடர்ந்து, பணம், நகை கொண்டுவந்துகொடு எனவும் தொந்தரவு செய்துள்ளார்.

 



 

பயந்துபோன 6-ஆம் வகுப்பு மாணவன் வீட்டிற்கு தெரியாமல் சிறுக, சிறுக, பணம், தங்க மோதிரம், கம்மல், செயின் என 10 சவரம் தங்க நகைகளை வீட்டிலிருந்து, திருடி வந்து 10-ஆம் வகுப்பு மாணவரிடம் கொடுத்துள்ளார். இதனை 10-ஆம் வகுப்பு மாணவன் திருப்போரூர் பகுதியில் உள்ள நகை அடகு கடைகளில் வைத்து பணம் பெற்றுள்ளார். சிறுதாவூர் பகுதியை சேர்ந்த 6-ஆம் வகுப்பு மாணவனுக்கு செல்போன் எப்படி வந்தது, வீட்டில் அடிக்கடி பணம், நகை திருடு போவதால் மகன் மீது அவரது பெற்றோருக்கு  சந்தேகம் ஏற்பட்டுள்ளது.  ஒரு கட்டத்தில் வீட்டிலும், கடையிலும் சிசிடிவி வைத்துள்ளனர்.



சிசிடிவி காட்சி..

 

பின்னர் நகை பணம் திருடியது சிசிடிவி கட்சி மூலம் தனது மகன்தான் திருடியுள்ளர் என்று உறுதி பெற்றோர்கள் அந்த பணத்தை என்ன செய்தாய் என்று கேட்டதற்கு செல்போன் வாங்கியது முதல், பணம் நகை திருடி 10-ஆம் வகுப்பு மாணவனிடம் கொடுத்த வரை கூறியுள்ளார். இது குறித்து 6-ஆம் வகுப்பு மாணவரின் பெற்றோர் திருப்போரூர் காவல்நிலையத்தில்  புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் திருப்போரூர் போலீசார்  வழக்கு பதிவு செய்து, திருப்போரூர் பகுதியை சேர்ந்த 10-ஆம் வகுப்பு  மாணவனை கைது  செய்தனர். பின்னர் நகைகளை அடகு வைத்த நகை கடை உரிமையாளரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து சிறுவன் அடகு கடையில் அடமானம் வைத்த  10 சவரன் தங்க நகையில், 6.1/2 சவரம் தங்க நகையை திருப்போரூர் போலீசார் மீட்டனர்.

 



பின்னர் சிறுவனை திருப்போரூர் போலீசார் கைது செய்து திருப்போரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறுவர்  இல்லத்தில் பள்ளியில் சேர்த்தனர். நகைக்கடை உரிமையாளர்களை போலீசார் கடுமையாக கண்டித்துள்ளனர். இது போன்ற சிறுவர்கள் நகைக்கடையில் நகைகளை அடகு வைப்பதை நகைக்கடை உரிமையாளர்கள் தவிர்க்க வேண்டும்.

 

அதே வேளையில் காவல்துறைக்கு தகவல் அளிக்க வேண்டும் என்றும், மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என  திருப்போரூர் காவல் ஆய்வாளர் வெங்கடேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.