செங்கல்பட்டு மாவட்டம் மதுவிலக்கு காவல் ஆய்வாளரின் கையெழுத்தை மோசடியாக, பயன்படுத்திய காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்
மதுராந்தகம் மதுவிலக்கு காவல் ஆய்வாளர்
செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கத்தில், மதுராந்தகம் மதுவிலக்கு காவல் நிலையம் இயங்கி வருகிறது. மதுவிலக்கு ஆய்வாளராக மங்கள பிரியா என்பவர் பணியாற்றி வந்தார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கடப்பாக்கம் அருகே உள்ள சேம்புலிபுரம் பகுதியில், குருசாமி என்பவரை மது பாட்டில்கள் விற்றதாக, மதுவிலக்கு காவல்துறையினர் கைது செய்து அவருடைய வங்கி கணக்கை முடக்கியுள்ளனர்.
வங்கி கணக்கு முடக்கம்
கைது செய்யப்பட்ட குருசாமி ஜாமீனில் விடுவிக்கப்பட்ட நிலையில் , அவரது வங்கிக் கணக்கில் சுமார் 6.30 லட்சம் மது விற்ற பணம் இருந்துள்ளது. மதுவிலக்கு ஆய்வாளரிடம் குருசாமி தன்னுடைய வங்கி கணக்கை எப்படி விடுவிப்பது என விசாரித்துள்ளார். அப்போது ஆய்வாளர் முறையாக நீதிமன்றத்தை அணுக வேண்டுமென ஆலோசனை கூறியுள்ளார்.
ஆனால், சாராய வியாபாரி குருசாமி மதுவிலக்கு காவல் நிலையத்தில் பணியாற்றி மாறுதலாக, கூவத்தூர் காவல் நிலையத்திற்கு சென்ற தலைமை காவலர்கள் கோபிநாத் மற்றும் மணிகண்டன் ஆகியோரிடம் குறுக்கு வழியில் பணத்தை வங்கியில் இருந்து எடுப்பதற்காக ஆலோசனை கேட்டுள்ளார் .
1.5 லட்சம் கமிஷன்
இந்த ஆலோசனையில் அடிப்படையில் சாராய வியாபாரி குருசாமி காவலர் கோபிநாத்திடம் என்னுடைய வங்கி கணக்கை மீண்டும் இயக்குவதற்கு நீங்கள் உதவி செய்தால் , அதில் உள்ள பணம் ரூபாய் ஒன்றரை லட்சம் உங்களுக்கு கமிஷன் தருகிறேன் என கூறியுள்ளார். இந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்ட தலைமை காவலர் கோபிநாத், மதுவிலக்கு காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் காவலர் மணிகண்டன் மூலம் தொடர்பு கொண்டு விபரத்தை தெரிவித்துள்ளார்.
திருட்டு வேலையில் ஈடுபட்ட காவலர்கள்
இதற்கு ஒப்புக்கொண்ட மணிகண்டன், மதுவிலக்கு ஆய்வாளர் அலுவலக முத்திரையை ஆய்வாளரின் அனுமதியின்றி பயன்படுத்தியும், போலியாக ஒரு பத்திரம் எழுதி மதுவிலக்கு காவல் ஆய்வாளர் மங்களபிரியா கையெழுத்தை போலியாக போட்டு சாராய வியாபாரி குருசாமியிடம் கொடுத்துள்ளனர். இந்த கடிதத்தைப் பெற்றுக் கொண்ட சாராய வியாபாரி குருசாமி கடப்பாக்கத்தில் உள்ள இந்தியன் வங்கியின் மேலாளரிடம் வழங்கியுள்ளார் . இதனை ஆய்வு செய்த வங்கியின் மேலாளர் காவல் ஆய்வாளரிடம் தொடர்பு கொண்ட போது, ஆய்வாளர் நான் எந்த ஒரு கடிதமும் கொடுத்து அனுப்பவில்லை என கூறியுள்ளார். இதன் அடிப்படையில் விசாரித்த காவல் ஆய்வாளர் முழு விசாரணை நடத்தியபோது , கோபிநாத் மற்றும் மணிகண்டன் இவர்கள் இருவரும் இந்த திருட்டு வேலையில் ஈடுபட்டது தெரியவந்தது. உடனடியாக இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
சஸ்பெண்ட் செய்து உத்தரவு
காவலர் கோபிநாத் மற்றும் மணிகண்டனை செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வாளரின் அலுவலக முத்திரையை தவறாக, பயன்படுத்த முயன்ற தலைமைக் காவலர்கள் கோபிநாத் மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்துள்ளார். காவல்துறைக்கு என மக்கள் மத்தியில், கௌரவமான பெயர் இருக்கும்போது, ஒரு சில காவலர்கள் செய்யும் செயலால், நாட்டுமட்ட காவல்துறைக்கும் தலைகுனிவை ஏற்படுத்துகிறது. வேலியே பயிரை மேய்வது போல திருடனுக்கு துணைபோன காவலர்களால், இந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.