செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே கீழச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவர் விவசாய தொழிலை மேற்கொண்டு வருகிறார். முருகன் தனக்கு சொந்தமான நிலத்தில் பல ஆண்டுகளாக பயிர் வைத்து அதன் மூலம் வரும் வருமானத்தில் வாழ்ந்து வருகிறார். முருகன் வீட்டு அருகே பல ஆண்டுகளாக புளிய மரம் ஒன்று இருந்து வருகிறது. அந்த புளிய மரம் யாருக்கு சொந்தம் என அவர் அருகே வசித்து வரும் உமாநாத் என்பவர் அவருக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அடிக்கடி புளியமரம் சீசன் வரும் பொழுது வாக்குவாதத்தில் ஈடுபடுவதும் அதன் பின்னர் சண்டையில் சென்று முடிவதும் வழக்கமாக இருந்து வந்துள்ளது. குறிப்பாக கடந்த 18ஆம் தேதி மீண்டும் இருவருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு அந்த வாக்குவாதம் கைகலப்பில் முடிந்துள்ளது. இருவரில் யார் அந்த புளிய மரத்தில் இருந்து , புளியங்காய் பறிப்பது தொடர்பாக துவங்கிய வாக்குவாதம் இறுதியில் கைகலப்பில் முடிந்துள்ளது.
இருவரும் மாறி மாறி நீண்ட நேரம் கைகளால் தாக்கிக் கொண்டிருந்த பொழுது, அருகில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து முருகன் தலையில் பலமாக உமாநாத் தாக்கியுள்ளார். இருவரும் ஆக்ரோஷமாக தாக்கிக் கொள்வதை பார்த்து, தடுக்க வந்த முருகனின் உறவினர் அனுமந்தனையும் வலது கையில் இரும்பு கம்பியால் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
இதில் முருகனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், முருகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது சம்பந்தமாக செய்யூர் போலீசார் வழக்குப்பதிந்து தலைமறைவாக இருந்த உமாநாத் மற்றும் சிவலிங்கத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டிற்கு வெளியே இருந்த புளியமரம் யாருக்கு சொந்தம் என துவங்கிய பிரச்சினை கொலையில் முடிந்திருக்கும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்