செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் பகுதியில் பட்டா கத்தியை காட்டி செல்போன் கடையில் கொள்ளையடித்த 4 பேரை, போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.  கேளம்பாக்கத்தை சேர்ந்தவர் போலோராம் (39). கோவளம் செல்லும் சாலையில் செல்போன் கடை வைத்துள்ளார். இவரது கடையில் 2 ஊழியர்கள் வேலை செய்கின்றனர். கடந்த 7ம் தேதி இரவு போலோராம், ஊழியர்களுடன் கடையில் இருந்தனர். அப்போது அங்கு வந்த 4 வாலிபர்கள், செல்போன் வாங்க வந்திருப்பதாக கூறி, மாடல்களை கேட்டனர். இதையடுத்து கடை ஊழியர்கள் 2 செல்போன்களை எடுத்துக் காட்டினர். 2 பேர் செல்போன்களை பார்த்துக் கொண்டிருந்தனர்.


அப்போது, பின்னால் நின்றிருந்த 2 பேர், மறைத்து வைத்திருந்த 2 பட்டா கத்திகளை எடுத்து, கடையில் இருந்த அனைவரையும் உள்ளே செல்லும்படி மிரட்டினர். நல்ல புது மாடல் செல்போன்களை எடுத்துத் தரச் சொல்லி, அவற்றை ஒவ்வொன்றாக பையில் அடுக்கிக் கொண்டனர். காய்கறி கடையில் நல்ல காய்களை கேட்டு வாங்குவதைப் போல், நல்ல 5 ஜி போனா எடுத்துப் போடுங்க என ரூ.10 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள்,  கல்லாப் பெட்டியில் வைத்திருந்த ரூ.59 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்து கொண்டு பைக்கில் தப்பிச் சென்றனர். புகாரின்படி கேளம்பாக்கம்  இன்ஸ்பெக்டர் மணிமாறன், எஸ்ஐ ராஜா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து, கடையில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து, 3 தனிப்படை அமைத்து விசாரித்தனர். அதில், பொன்னேரியை சேர்ந்த ஜெகா (எ) ஜெகதீஷ் (22), ரஞ்சித்குமார் (24), ஜெயப்பிரகாஷ்  (எ) சூர்யா (24), மணலி புதுநகர், சுப்ரமணியன் நகர் விக்கி (எ) விக்னேஷ் (24) ஆகியோர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது.




தொடர்ந்து போலீசார், 4 பேரையும் நேற்று சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள 18 செல்போன்கள், 4 பைக், 1 பட்டாக்கத்தி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட ஜெகதீஷ், ஜெயப்பிரகாஷ் ஆகியோர் பிஇ பட்டதாரிகள். ரஞ்சித், ஜெயப்பிரகாஷ் ஆகியோர் கடந்தாண்டு பொன்னேரியில் நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் விரைந்து குற்றவாளிகளை பிடித்த காவல் துறைக்கு செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் பாராட்டுகளை தெரிவித்தார்.


செங்கல்பட்டு மாவட்டத்தில் சட்டவிரோத செயல்கள் நடந்தால் 7200102104 என்ற எண்ணிலோ, குருந்தகவல் மற்றும் வாட்சப் மூலமாகவோ தகவல் தெரிவிக்கலாம். அதன்பேரில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தெரிவித்தார்.


 


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X