விழுப்புரம் : திண்டிவனத்தில் மூதாட்டியிடம் போலி ஏ.டி.எம் கார்டு கொடுத்து விட்டு ரூபாய் 19 ஆயிரத்தை நூதன முறையில் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபரை சி.சி.டிவி காட்சிகளின் அடிப்படையில் காவல்துறையினர் தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த நெய்குப்பி பகுதியை சேர்ந்தவர் விவசாயி கிருஷ்ணன்.   இவரது மனைவி சாந்தி இருவரும் நெல் விற்ற பணத்தை வங்கி கணக்கில் இருந்து எடுக்க நேற்று மாலை திண்டிவனம் நேரு வீதியில் உள்ள எஸ்.பி.ஐ வங்கி ஏ.டி.எம் மையத்திற்கு பணம் எடுக்க சென்றுள்ளனர். உடன் வந்த அவரது கணவர் கிருஷ்ணன் இருசக்கர வாகனத்தை எதிரில் நிறுத்திவிட்டு வருவதற்குள் மூதாட்டி சாந்தி ஏடிஎம் மையத்தின் வெளியே தொப்பி அணிந்து நின்றிருந்த ஒரு இளைஞரிடம் ஏடிஎம் அட்டையை கொடுத்து 19 ஆயிரத்தை எடுத்து தருமாறு கூறியுள்ளார்.




சிறிது நேரம் கழித்து வெளியே வந்த அந்த நபர் ஏடிஎம் அட்டை செயல்படவில்லை உள்ளே சென்று சலான் எழுதிக் கொடுத்து பணத்தைப் பெற்று செல்லுமாறு கூறி தான் மறைத்து வைத்திருந்த வேறு ஒரு ஏடிஎம் கார்டை மூதாட்டியிடம் கொடுத்துவிட்டு சென்றுவிட்டார். பின்னர் அந்த மூதாட்டி வங்கிக்குள் சென்று சலானை பூர்த்தி செய்து பணத்தை எடுக்க காசாளரிடம் கொடுத்தபோது தங்களது வங்கிக் கணக்கில் சிறிது நேரத்திற்கு முன்புதான் ரூபாய் 19 ஆயிரம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்ததையடுத்து அதிர்ச்சியடைந்த மூதாட்டி அழுது புலம்பியுள்ளார்.




இது குறித்து நேற்று இரவு திண்டிவனம் காவல் நிலையத்தில் மூதாட்டி சாந்தி புகார் அளித்துள்ளார். ஏடிஎம் மையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி மர்ம நபரை தேடி வருகின்றனர். மூதாட்டியிடம் நூதன முறையில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பணத்தைப் பறிகொடுத்த மூதாட்டியின் மகன் ஹரிதாஸ் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: 32 ஆண்டுகளுக்கு முன்... தனது முதல் நேர்காணலில் சச்சின் என்ன சொன்னார் தெரியுமா?