வெளிநாட்டு சுற்றுலாப் பயணி முன் சுயஇன்பத்தில் ஈடுபட்ட இந்திய டாக்ஸி டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி, தெற்கு டெல்லியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு வெளிநாட்டைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணை இந்த டாக்ஸி ஓட்டுநர் ஏற்றிச் சென்ற நிலையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.


லண்டனைச் சேர்ந்த  வழக்கறிஞரான அப்பெண் முன்னதாக புகார் அளித்ததைத் தொடர்ந்து இந்தியாவிலிருந்து மீண்டும் லண்டனுக்குத் திரும்பினார்.


இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்ட நபர் உத்தரபிரதேசத்தின் லால் கஞ்ச் மாவட்டத்தில் வசிக்கும் டாக்ஸி ஓட்டுநர் மாக்கான் லால் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இவர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்புதான் ஓட்டுநராக பணியைத் தொடங்கியதாகவும் காவல்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.


பாதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பெண் தனது நண்பருடன் இந்தியாவுக்கு சுற்றுலா செல்ல விரும்பி  வந்ததாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர்.


பாதிக்கப்பட்ட பெண் முன்னதாக டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து டாக்ஸியை முன்பதிவு செய்துள்ளார். தொடர்ந்து தெற்கு டெல்லியில் உள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டபோது, ​​டாக்ஸி ஓட்டுநர் காருக்குள் சுயஇன்பத்தில் இருவரது முன்னும் ஈடுபட்டுள்ளார்.


இதனைப் பார்த்து வெளிநாட்டுப் பெண்ணும் அவரது தோழியும் ஓட்டுநரைக் கண்டித்துள்ளனர். ஆனால் அதற்கெல்லாம் அசராமல் அங்கு நடந்தது குறித்து வேறு எவரிடமும் சொல்லக் கூடாது என இருவரையும் ஓட்டுநர் மிரட்டியுள்ளார். 


இந்நிலையில் முன்னதாக அப்பெண் அளித்த புகாரின்பேரில் டாக்ஸி ஓட்டுநர் கைது செய்யப்பட்டு தொடர்ந்து ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.


மேலும், பாதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பெண்ணின் வாக்குமூலத்தை தாங்கள் பதிவு செய்ததாகவும், வழக்குப் பதிவு செய்த சில மணி நேரங்களிலேயே அப்பெண் அங்கிருந்து வெளியேறிவிட்டதாகவும், அப்பெண் தன் தாயகம் திரும்ப முன்கூட்டியே விமான டிக்கெட் பதிவு செய்திருந்த நிலையில் மீண்டும் நாடு திரும்பியதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.


தொடர்ந்து, சாட்சியங்கள், அறிக்கையின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவரை தாங்கள் கைது செய்ததாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.