குடும்பத்திற்குள் ஏற்படும் சொத்து பிரச்னைகள் சில நேரங்களில் கொலை வரை செல்வது வழக்கமாகி வருகிறது. அப்படி ஒரு அதிர்ச்சிகர சம்பவம் மீண்டும் நடைபெற்றுள்ளது. இம்முறை சொத்திற்காக சொந்த தாயை மகன் ஒருவர் கொலை செய்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்சர் பகுதியைச் சேர்ந்தவர் ஓம் பிரகாஷ். இவருக்கு மஞ்சு என்ற மனைவியும் மூன்று மகன்களும் உள்ளனர். கடந்த மாதம் 27ஆம் தேதி இவருடைய மனைவி மஞ்சு துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்துள்ளார். அத்துடன் ஓம் பிரகாஷூம் பலத்த முறையில் தாக்கப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து இது தொடர்பாக காவல்துறையினருக்கு அவருடைய குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர்.
அவர்கள் அளித்த புகாரின் பெயரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். அந்த விசாரணையில் இந்த குடும்பத்தில் சொத்து தகராறு இருப்பது தெரியவந்துள்ளது. அப்போது இவர்களின் கடைசி மகனான யத்தேந்திராவை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அவர் தன்னுடைய தாயை கொலை செய்ததையும் மற்றும் அவருடைய தந்தையை பலமாக தாக்கியதையும் ஒப்புக் கொண்டுள்ளார். அதாவது தன்னுடைய தந்தை ஓம் பிரகாஷ் சில மாதங்களுக்கு முன்பாக ஒரு இடம் ஒன்றை விற்றுள்ளதாக கூறியுள்ளார். அந்த இடத்தை விற்ற பணத்தை தன்னுடைய சகோதாரர்களுக்கு பிரித்து கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
எனினும் யத்தேந்திராவின் பங்கை அவருடைய தந்தை தராமல் சகோதரரின் மனைவிக்கு கொடுத்தால் யத்தேந்திராவிற்கு கோபம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர் தன்னுடைய தாயை நாட்டு துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளார். இந்த துப்பாக்கி சத்தம் கேட்டு வந்த தன்னுடைய தந்தை ஓம் பிரகாஷையும் அவர் தாக்கிவிட்டு தப்பி ஓடியுள்ளார். அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட நாட்டு துப்பாக்கியையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் யத்தேந்திரா மீது கொலை குற்றம் தொடர்பான வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். சொத்திற்காக சொந்த தாயை மகன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: மிஸ்டுகால் மூலம் இளம்பெண்களுக்கு வலை! நிர்வாணப்படம் காட்டி பணம் மோசடி! சிக்கிய இளைஞர்!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்