மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தேர் மேல வீதியில் சாலையோரம் கடந்த ஜுலை மாதம் 30-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து சீர்காழி காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் இறந்தவர் மயிலாடுதுறை, சீனுவாசபுரம், திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்த 50 வயதான முருகன் என்பதும், அவர் கொத்தனார் வேலை செய்து வந்ததும் தெரிய வந்தது. தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் முருகன் கொலை செய்யப்பட்டு இறந்தது தெரியவந்தது.
சிக்கிய சித்தாள்:
மேலும் முருகன் சீர்காழி எவ்வாறு வந்தார்? அவரை கொலை செய்தது யார்? என்று தீவிரமாக காவல்துறையினர் சீர்காழி பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். ஆனால், காவல்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் பழுதால் முருகனை கொலை செய்த நபரை பிடிக்க முடியாமல் சீர்காழி காவல்துறையினர் திணறி வந்தனர். ஒருவழியாக பிரதான சாலையில் கடை ஒன்றில் வைத்திருந்த சிசிடிவி காட்சியில் பதிவான கொலையாளி முகத்தை வைத்து உறவினர்கள் அளித்த தகவலில் கொலையாளி, முருகனுடன் பணி செய்து வந்த சித்தாள் என்பது உறுதியானது.
முதலில் இது குறித்து சீர்காழி காவல்துறையினர் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து முதலில் விசாரணை நடத்தி வந்த நிலையில், முருகனுடன் ஒரு நபர் சேர்ந்து வருவது போன்ற காட்சி சிசிடிவியில் பதிவாகி இருந்ததை அடுத்து அந்த நபருக்கு கொலையில் தொடர்பு இருக்ககூடும் என அந்த நபரை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் அந்த நபர் கும்பகோணம் பகுதியில் பதுங்கி இருப்பதை அறிந்து உறவினர்கள் கொலையாளியை பிடித்து வந்து சீர்காழி காவல் நிலையத்தில் ஒப்படைந்தனர். பின்னர் காவல்துறையினர் விசாரணையில் அந்த நபர் சீர்காழி அருகே உள்ள நாங்கூர் பகுதியை சேர்ந்த 26 வயதான ராஜகோபால் என்பதும், இவர் கொத்தனார் முருகனிடம் சேர்ந்து வேலை பார்க்கும் சித்தாள் என்பது தெரியவந்தது.
கடனை திருப்பிக்கேட்ட கொத்தனார்:
மேலும் கொத்தனார் முருகன் கொலை வழக்கு தொடர்பான சிசிடிவி காட்சியில் அவருடன் உள்ள நபர் ராஜகோபால் என்பதை அறிந்த காவல்துறையினர் அவரிடம் தீவிரமாக விசாரணை செய்ததில் கொத்தனார் முருகனை, ராஜகோபால் கொலை செய்ததாக தெரிவித்துள்ளார். முருகனிடம் தான் 5 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியிருந்ததாகவும், அந்த பணத்தை முருகன் கேட்டுவந்த நிலையில், முருகனை ராஜகோபால் சீர்காழிக்கு படம் பார்க்க போவலாம் என கூறி அழைத்து வந்து திரையரங்கு அருகே உள்ள இடத்தில் சாலையோரம் அமர்ந்து மது அருந்தியதாகவும், மது போதை அதிகமானதால் மது போதையில் கொத்தனார் முருகனை கையை கட்டி போட்டு கழுத்தை நெரித்து கொலை செய்ததாக காவல்துறையினரிடம் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து சீர்காழி போலீசார் கொலைவழக்காக மாற்றி ராஜகோபாலை கைது செய்தனர் . மேலும், சீர்காழி காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்த போது ராஜகோபால் தப்பி ஓடிய நிலையில், அவரை துரத்தி சென்ற காவல்துறையினர் காவல் நிலையம் பின்புறம் உள்ள கழுமலையாற்றில் இறங்கி காட்டு பகுதியில் பதுங்கி இருந்த ராஜகோபாலை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.