BSP Armstrong Case: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏற்கனவே கைதான அருளின் செல்போன் ஹரிதரன் என்பவரிடம் இருந்த நிலையில், கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கைதான ஹரிதரன் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என கூறப்படுகிறது. ஏற்கனவே, 16 பேர் கைதான நிலையில், திருவேங்கடம் என்கவுண்டர் செய்யப்பட்டார்.
கொலைக்கு பயன்படுத்தப்பட்ட செல்போன்கள், திருவள்ளூர் வெங்கத்தூர் கூவம் ஆற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. கூவம் ஆற்றில் வீசப்பட்ட 5 செல்போன்களையும் ஸ்கூபா வீரர்கள் மூலம் காவல்துறையினர் மீட்டனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு:
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். சென்னை பெரம்பூரில் உள்ள வேணுகோபால்சாமி கோவில் தெருவில் வசித்து வந்த நிலையில் ஜூலை 5 ஆம் தேதி இரவு தனது வீட்டு வேலை நடந்துக் கொண்டிருக்கும் இடத்தில் நின்று நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது மர்ம கும்பலால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
மேலும் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்துவிட்டு மர்ம கும்பல் தப்பியோடும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகியது. அதில் டெலிவரி ஊழியர்கள் போல் வந்த கும்பல் ஒன்று ஆம்ஸ்ட்ராங்கை வெட்டி விட்டு 3 இருசக்கர வாகனங்களில் தப்பிச் செல்லும் காட்சிகளும் பதிவாகியது
ஆம்ஸ்ட்ராங் கொலையில் பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி புன்னை பாலா, அவரது நண்பர்கள் என கூறப்படும் ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள் உள்ளிட்ட 16 பேர் கைது செய்யப்பட்டன்ர். இதனிடையில் விசாரணையின் போது தப்பியோட முயன்றதால் திருவேங்கடத்தை காவல் துறையினர் என்கவுண்டரில் சுட்டதைத் தொடர்ந்து திருவேங்கடம் உயிரிழந்தார்.
இந்நிலையில், தற்போது மேலும் ஒருவர் திருவள்ளூரைச் சேர்ந்த ஹரிதரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.