பாரீஸ் ஒலிம்பிக் 2024:


பாரீஸ் ஒலிம்பிக் 2024 தொடர் ஜூலை 26 ஆம் தேதி பிரமாண்டமாக தொடங்க உள்ளது. இந்த போட்டிகள் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் இந்த முறை 10,500-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர்.  இதில் தமிழ் நாடு சார்பாக ஆடவர் துப்பாக்கி சூடு பிரிவில் கலந்து கொள்ள உள்ள பிருத்விராஜ் தொண்டைமான் யார்? அவர் தங்கம் வெல்வதற்கான வாய்ப்பு இருக்கிறதா? என்பது தொடர்பான தகவல்களை இங்கே பார்ப்போம்:


யார் இந்த பிருத்விராஜ் தொண்டைமான்?


பாரீஸ் ஒலிம்பிக் 2024 தொடரில் தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டவர் தான்  பிருத்விராஜ் தொண்டைமான். 1987 ஜூன் மாதம் 6ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்தவர் பிருத்விராஜ் தொண்டைமான் 37 வயதான இவர் புதுக்கோட்டை மன்னர் ராஜகோபால தொண்டைமான் மற்றும் திருச்சி மாநகராட்சி முன்னாள் மேயர் ராணி சாருபாலா தொண்டைமான் ஆகியோரது மகன் ஆவார். அவரது தந்தை ராஜகோபால் தொண்டைமான் டபுள் டிராப் மற்றும் ஸ்கீட் பிரிவில் சிறந்த வீரர்.


தந்தையை போலவே அவரின் வழிகாட்டுதலில் பிரித்விராஜ் தொண்டைமான் ஷாட்கன் டிராப் பிரிவில், பல்வேறு விருதுகளை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்து வருகிறார். இச்சூழலில் தான் ஆடவர் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் கலந்து கொள்கிறார். ஏற்கனவே உலக துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றவர். தனி நபர் மூலம் இந்தியவிற்கு முதன் முதலில் ஒலிம்பிக் பதக்கம் கிடைத்தது துப்பாக்கி சுடுதல் போட்டியில் தான்.


இதனால் இந்த முறை பிருத்விராஜ் தொண்டைமான் பதக்க வேட்டையில் ஈடுபடுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. 10 வருடங்களுக்கு மேலாக துப்பாக்கி சுடுதல் போட்டியில் இருக்கும் பிருத்விராஜ் கடந்த முறை நடைபெற்ற உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில் இரண்டு பதக்கங்களும், ஆசிய விளையாட்டு போட்டியில் தங்க பதக்கமும் வென்றவர்.