கூலி படத்தில் இணைந்த மஞ்சுமெல் பாய்ஸ் நடிகர்


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் கூலி . ரஜினினியின் 171 ஆவது படமாக உருவாகும் இப்படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். கிரீஷ் கங்காதரன் ஓளிப்பதிவு செய்கிறார். கூலி படத்தில் நடிகர் சத்யராஜ் மற்றும் ஷ்ருதி ஹாசன் நடிக்க இருப்பதாக முன்னதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் தற்போது இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி மலையாளத்தில் கும்பலங்கி நைட்ஸ் , அம்பிலி , ரோமான்ச்சம் சமீபத்தில் வெளியான மஞ்சுமெல் பாய்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்த செளபின் ஷாஹிர் கூலி படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இப்படத்தில் பல நடிகர்கள் இணைய இருப்பதாக கூறப்படுகிறது. 


எஸ்.ஜே சூர்யா


நடிப்பு அரக்கண் என்று ரசிகர்களால் கொண்டாடப் படும் நடிகர் எஸ்.ஜே சூர்யா இன்று தனது 56 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். தமிழில் சமீபத்தில் வெளியான இந்தியன் 2 படத்தில் நடித்த எஸ்.ஜே சூர்யா தனுஷின் ராயன் , விக்ரமின் வீர தீர சூரன் , ராம் சரண் நடிக்கும் கேம் சேஞ்சர் , பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் எல்.ஐ.சி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இது தவிர்த்து தெலுங்கில் நடிகர் நானி நடித்துவரும் சரிபோதா சனிவாரம் படத்திலும் அவர் நடித்து வருகிறார். எஸ்.ஜே சூர்யாவின் பிறந்தநாளை ஒட்டி சரிபோதா சனிவாரம் படக்குழு சார்பாக ஒரு சிறிய வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் போலீஸ் லுக்கில் எஸ்.ஜே சூர்யா வருவது ரசிகர்களை கவர்ந்துள்ளது. மேலும் விக்ரம் நடித்து வரும் வீர தீர சூரன் படத்திலும் எஸ்.ஜே சூர்யா போலீஸாக நடித்து வரும் தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது. 


எஸ்.ஜே சூர்யா தவிர்த்து பிக்பாஸ் பிரபலம் சாக்‌ஷி அகர்வால் , இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா உள்ளிட்டவர்கள் இன்று தங்கள் பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்கள்.


சர்ச்சையில் சிக்கிய சூனு சூட்


உத்திரபிரதேசத்தில் உள்ள கன்வர் யாத்ரா வழிதடத்தில் உள்ள உணவகங்களில் உணவு சமைப்பவர் உட்பட இந்த உணவகங்களில் வேலை செய்யும் பணியாளர்களின் பெயர்களை பெயர் பலகையில் குறிப்பிட வேண்டும் என்று முசாஃபர் நகர் காவல் துறை சமீபத்தில் உத்தரவிட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த உத்திர பிரதேச அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து நெட்டிசன் ஒருவர் உணவு சமைக்கும் ஒருவர் அதில் எச்சில் துப்பும் வீடியோவை பகிர்ந்து இந்த உணவை சோனு சூட் கொடுங்கள் என்று பதிவிட்டிருந்தார் . இதற்கு பதிலளித்த நடிகர் சோனு சூட் “ராமாயணத்தில் ராமர் சபரி வழங்கிய பழங்களை ஏற்றுக் கொண்டு சாப்பிடவில்லையா. அதே போல் நானும் இந்த உணவை சாப்பிடுவேன்” என்று தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து உணவில் எச்சில் துப்பும் செயலை நியாயப் படுத்தியதாக சோனு சூட்  கருத்திற்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்புகள் குவிந்து வருகின்றன.