BSP Armstrong Murder: பகுஜன் சமாஜ்வாதி கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், கொல்லப்பட்ட வழக்கில் 8 பேர் போலீசில் சரண்டைந்துள்ளனர்.
8 பேர் சரண்:
பகுஜன் சமாஜ்வாதி கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், சென்னையில் அவரது வீட்டின் அருகிலேயே வைத்து வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு இரு சக்கரங்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல், இந்த கோர சம்பவத்தை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் 6 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் தான், ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக, கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்ட பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் சகோதரர் ஆற்காடு பாலு என்பவர் உட்பட 8 பேர் அண்ணாநகர் துணை ஆணையர் முன்பு போலீசில் சரணடைந்துள்ளனர்.
காரணம் என்ன?
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக, ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், ஆற்காடு சுரேஷின் சகோதரர் இந்த கொலையில் தொடர்பில் இருப்பதால், தனிப்பட்ட பகை காரணமாக து நடந்து இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது. மாநில தலைநகர் சென்னையில் ஒரு தேசிய கட்சியின் தலைவர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை குவித்து வருகின்றன.
புதிய வீட்டின் அருகே கொலை:
52 வயதான ஆம்ஸ்ட்ராங் பெரம்பூர் வேணுகோபால் சாமி தெருவில் வசித்து வந்தார். அங்கு புதிதாக பெரிய அளவில் வீடு கட்டி வருவதால், தற்காலிகமாக அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். நாள்தோறும் மாலை நேரங்களில் தனது புதிய வீட்டின் கட்டுமான பணிகளை நேரில் பார்வையிடுவதோடு, அங்குள்ள தனது நண்பர்கள் மற்றும் கட்சிக்காரர்களை சந்திப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தார். அந்த வகையில் நேற்று அங்கிருந்த போதுதான், 3 பைக்குகளில் வந்த 6 பேர் கொண்ட கும்பல், கையில் பட்டா கத்தியுடன் ஆம்ஸ்ட்ராங்கை சுற்றி வளைத்து தாக்கியுள்ளது. இதில் , படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சட்ட - ஒழுங்கு என்ன ஆனது?
எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ”ஒரு தேசிய கட்சியின் மாநிலத் தலைவர் பொறுப்பில் உள்ளவர் படுகொலை செய்யப்படுகிறார் எனில், இதற்கு மேல் இந்த திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கை என்னவென்று சொல்லி விமர்சிப்பது? கொலை செய்வதற்கான தைரியம் குற்றவாளிகளுக்கு எப்படி வருகிறது? காவல்துறை, அரசு, சட்டம் என எதன் மீதும் அச்சமற்ற நிலையில் தொடர்ச்சியாக குற்றங்கள் நடைபெறும் அளவிற்கு அவல நிலைக்கு சட்டம் ஒழுங்கைத் தள்ளிய திமுக முதல்வருக்கு எனது கடும் கண்டனம் என தெரிவித்துள்ளாஎர். அண்ணாமலை வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “நம் சமூகத்தில், வன்முறைக்கும் மிருகத்தனத்துக்கும் இடமில்லை, ஆனால் கடந்த 3 ஆண்டு கால திமுக ஆட்சியில், தமிழகத்தில் அதுவே வழக்கமாகி விட்டது. தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை சீர்குலைத்துவிட்டு, மாநிலத்தின் முதல்வராகத் தொடரும் தார்மீக உரிமை தனக்கு இருக்கிறதா என்று, ஸ்டாலின் அவர்கள் தன்னையே கேட்டுக்கொள்ள வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.